
பிரதமர் ரணிலால் திறப்பு ஜனாதிபதி ரணிலால் புறக்கணிப்பு !; யாழ்.போதனா வைத்தியசாலை அவசர விபத்து சிகிச்சைப் பிரிவின் அவல நிலை
2018 இல் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருந்தபோது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரால் திறந்து வைக்கப்பட்ட அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு இன்று செயலிழந்த நிலையில் காணப்படுவது குறித்து பலரும் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர்.
இந்த அவசர விபத்து சிகிச்சைப்பிரிவு திறக்கப்பட்ட பின்னர் இங்கு எந்தவித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. நிரந்தர வைத்திய நிபுணர்களும் நியமிக்கப்படவில்லை. வைத்தியர்களோ, தாதியர்களோ, சிற்றூழியர்களோ நியமிக்கப்படவில்லை.
பகுதி நேரமாக இந்த சிகிச்சைப் பிரிவு தற்போது காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையே இயங்குகின்றது. இங்கு அனுமதிக்கப்படுவோர் வேறு விடுதிகளுக்கு மாற்றப்படும் அவல நிலையே காணப்படுகின்றது.
இலங்கையில் வேறு பாகங்களில் உள்ள வைத்தியசாலைகளில் அவசர விபத்து சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் 12 முதல் 24 மணி நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால், இங்கோ, இழுதடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.
இந்த அவசர விபத்து சிகிச்சைப் பிரிவில் குறைந்தது 2 சத்திர சிகிச்சை நிபுணரும், 2 எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரும், அவர்களுக்குரிய 2 மயக்க மருந்து நிபுணர்களும், அவர்களுக்குரிய மருத்துவர்களும் தாதிய உத்தியோகத்தர்களும் சிற்றூழியர்களும் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அப்போது பிரதமர் ரணிலால் திறக்கப்பட்ட இந்தச் சிகிச்சைப் பிரிவு கடந்த 5 வருடங்களாகப் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது.
சகல மாகாணங்களிலும் வைத்தியசாலைகளில் அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு 24 மணிநேரமும் இயங்கி வருகையில் வட மாகாணத்தில் மட்டும் இந்த அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு மூடப்படும் நிலையிலுள்ளது குறித்து பலரும் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றனர்.

