
இலங்கையில் விமானிகளுக்கு பற்றாக்குறை விமானப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து
இலங்கையில் விமானிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக விமானப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெளிக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்தே இதனைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,
கடந்த 6மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் 70 விமானிகள் விலகியுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் தற்போது 260பேருக்கும் குறைவான விமானிகளே இருக்கின்றனர். இந்த வருடத்தில் மேலும் 18பேர் விலகவுள்ளனர். இலங்கைக்கு 330 விமானிகள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 260 விமானிகளே உள்ளனர்.
இந்த விமானிகள் பற்றாக்குறையால் சேவையில் இருக்கும் விமானிகள் சர்வதேச விதிமுறைகளை மீறி விமானத்தை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் விமானம் செலுத்துவது என்பது மிகவும் அழுத்தம் கூடியது..அதனால் விமானி ஒருவர் விமானத்தை செலுத்திய பின்னர் சர்வதேச விதிமுறைக்கு அமைய அவருக்கு ஓய்வு நேரம் இருக்கிறது.ஆனால் அந்த ஓய்வு நேரம் தற்போது இலங்கை விமானிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் எதிர்வரும் சுற்றுலா சமயத்தில் தற்பாேது இருக்கும் விமானிகளின் ஓய்வு நேரத்தை சுருக்கி, அவர்களை இந்த சேவைக்கு ஈடுபடுத்துவார்கள். இதனால் இவர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி விமானத்தை செலுத்துவார்கள். அதன் காரணமாக விமானப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவே விமானிகளின் பற்றாக்குறை தொடர்பில் அரசு உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

