
ஆட்சியை கைப்பற்றுவதே சிலரது முக்கிய நோக்கம்
இன மற்றும் மதவாத மோதல்களை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காண்பித்து ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் என்றும், இதற்காக பல்வேறு நபர்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகின்றன என்றும் கத்தோலிக்க சபையின் ஊடக பேச்சாளரான வண.சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மத நம்பிக்கைகள் மற்றும் மத சம்பிரதாயங்களை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிப்பது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும். இனவாதம் மற்றும் மதவாத மோதல்களை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி அதனூடாக அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இவ்வாறான சந்தர்தப்பதை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நபர்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை திட்டமிட்டு பயன்படுத்துவது ஆரம்பத்தில் இருந்து நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மத பிரிவினை அவ்வாறான சூழ்ச்சிகளின் பகுதியாகும் என்று தெரிகின்றது. இறுதியில் இதனூடாக அதிகாரத்தை வெற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்வதுடன், மோதிக்கொள்ளும் சாதாரண மக்களும் எமது தாய்நாடும் ஏற்றுக்கொள்ள முடியாத வறுமை நிலைக்கு தள்ளப்படலாம்.
இதனால் பௌத்தம் உள்ளிட்ட நாட்டின் மதங்களை அவமதிப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பாகவும், அதன்பின்னால் இருக்கும் நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பாகவும் விரிவான, வெளிப்படையான, பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டியது பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பாகும் என்பதனை கூறிக்கொள்கின்றோம் என்றார்.

