
வடக்கில் பாரிய நில அபகரிப்பு,பெருமெடுப்பில் சிங்களக் குடியேற்ற த்துக்காக பரந்து விரிந்து வரும் மகாவலி ‘ஜே’ வலயம்
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுமார் 37 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி மகாவலி ‘ஜே’ வலயம் என்ற பெயரில் பாரிய நில அபகரிப்பு மற்றும் பெருமெடுப்பில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தகவல் தருகையில்,மகாவலி ‘ஜே’ வலயத்தின் ஊடாக மணலாறு முழுமையாகவும் கரைதுறைப்பற்று மற்றும் ஒட்டுசுட்டானின் சில பகுதிகளில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் அவை பகிரங்கமாக சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன .
இந்நிலையில் முல்லைத்தீவு – மாந்தை கிழக்கில் அம்பாள்புரம், கரும்புள்ளியான், கொல்லவிளாங்குளம், பாலிநகர், பாண்டியன் குளம், செல்வபுரம், சிராட்டிகுளம், கொம்பு முறிப்பு, நட்டாங்கண்டல், ஒட்டறுத்தகுளம், சிவபுரம், வன்னிவிளாங்குளம் விநாயகபுரம், ஆகிய 15 கிராமசேவகர் பிரிவுகளையும், முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் அனிஞ்சியங்குளம் பாரதிநகர், புகழேந்திநகர், திருநகர், யோகபுரம் கிழக்கு உள்ளிட்ட 7 கிராம சேவகர் பிரிவுகளையும் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் பாலியாறு,அந்தோனியார்புரம், ஆத்திமோட்டை,இலுப்பக்கடவை, கள்ளியடி,கூறாய்,கோயிற்குளம், காயாநகர்,பெரியமடுகிழக்கு, பெரியமடு மேற்கு,பள்ளமடு,வெடுத்தல்மடு கிழக்கு, வெடுத்தல்மடு வடக்கு உள்ளடங்கலாகசுமார் 15 கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மகாவலி ‘ஜே’ வலயம் உருவாக்கப்படவுள்ளது.
இதற்கான முன்னாயத்தமாக மகாவலி எல் வலயத்தினுள் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கும் 37 கிராமசேவகர் பிரிவுகளிலும் உள்ள அரச காணிகள்,தனியார் கணிகள், வீதிகள், குளங்கள், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்கள காணிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விபரங்களை தமக்கு உடனடியாக வழங்கும்படி தொடர்புடைய திணைக்களங்களுக்கு மே மாதம் 2ஆம் திகதி சிங்களத்தில் கடிதங்கள் அனுப்பப் பட்டிருக்கின்றன .
ஏற்கனவே மகாவலி ‘ஜே’ வலயத்தின் ஊடாக சுமார் 4368 ஏக்கர் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டு பெறுமதியான வயல் நிலங்கள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன் ‘எல்’ வலயத்தினை யாழ்.வடமராட்சி கிழக்கு – அப்பன் குடியிருப்புவரை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக மகாவலி ‘ஜே’ வலயம் உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன . மறுபக்கம் பெரிய ஆறு மற்றும் சூரியன் ஆறு ஆகிய ஆறுகளை மறித்து கட்டப்படும் ஹிவுல் ஓயா திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கில் இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுகுளம்,வெள்ளான்குளம், பெரியகட்டுகுளம், பனிக்கல்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம்,குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம் ஆகிய 10 நீர்ப்பாசன குளங்களும், அவற்றின் கீழ் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக விவசாய நிலங்களும் அபகரிக்கப்படவுள்ளன .
இதன் ஒட்டுமொத்த நன்மைகளும் மகாவலி ‘எல்’ வலயத்தில் குடியேற்றப்பட்ட வெலி ஓயா மக்களை சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

