அறியாமை அகதிகள்

அறியாமை அகதிகள்

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அகதிகள் உருவாகுவது உண்டு. ஆனால் இங்கே ஓர் கூட்டம் திட்டமிட்டு அகதிகளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் தாங்களும் அகதிகள் தான் என்று அவர்களுக்கே தெரியாது. ஆதலால் தான் நான் என் சமூகத்தை பற்றி பேச போகும் இக்கட்டுரையில் எனது அடையாளத்தின் இருப்பை நானே அறியாமை அகதிகளாக அடையாளப்படுத்திக் கொள்கின்றேன்.

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வெள்ளைக்கார வேட்டை நாய்களின் பெருந்தோட்ட வியாபார நலனுக்காகவும் தன் இன மக்களின் குருதியை குடித்து மகிழும் ஓநாய்களான பெரிய கங்காணிமார்களின் சுய இலாபத்திற்காகவும் வறுமையை காரணம் காட்டி ஓர் இனம் நாடு விட்டு நாடு அதாவது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தான் வாழ்ந்த மண்ணில் இருந்து வேரோடு அறுத்து எறியப்படுகிறார்கள் அவர்கள். உணர்வுகளை அந்த மண்ணிலேயே தொலைத்து விட்டு, வெறும் உயிர் தாங்கிய உடலாக இலங்கை மண்ணின் இறங்கும் துறையில் இறங்கி, நடையாக நடந்து நாட்டின் மத்திய பகுதியை அடைகிறார்கள். வறுமையின் பிடியால் சொந்த மண்ணைத் துறந்து வந்த மக்களுக்கு வந்த மண்ணிலும் துன்பத்திற்குப் பஞ்சமில்லை.

மலைகள் சூழ்ந்திருக்கும் காட்டை நாடாக மாற்றிய அந்த படைப்பாளிகள் மலிவான ஊதியத்திற்காக, சுய லாபத்திற்காகச் செயற்படும் அந்தக் கூட்டத்திற்காக, தமது உயர்வான உழைப்பை விற்றுக் கொண்டிருந்தார்கள். உடமை துறந்து, உழைப்பை வாரி வழங்கும் அக் கூட்டத்திற்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடையாது.

அயர்ந்து உறங்க ஒரு தகுதி வாய்ந்த உறையுள் கிடையாது, அறியாமை விலக்க கல்வி கிடையாது. சொந்தக் காணி மற்றும் நிலம் கிடையாது. தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முகவரி கிடையாது. ஏன்? வாழ்ந்த வாழ்வை சொல்ல கல்லறைகூடக் கிடையாது. வழி காட்ட நல் ஆசான் கிடையாது,

வந்த சேர்ந்த மண்ணுக்காக மாண்டு மடியும் அந்த கூட்டத்திற்கு அரசியல் உரிமை கிடையாது. எதுவுமே கிடைக்காத இந்த மண்ணிலே அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் வறுமையும் அதன் வழி வந்த பசியும், பட்டினியும், பஞ்சமும் மட்டும் தான்.
தன் விதி இறைவன் செய்த சதி என்று நிதமும் உழைப்பை விற்று உரிமை அறியாது நிற்கும் அந்த இனத்தின் வலியை பொருட்படுத்த ஆளில்லை. ஆனால் அவர்களை நோக்கிய நையாண்டிக்கும், கேலிப் பேச்சுக்கும் ஒரு போதும் பஞ்சமே இல்லை.

உலகிற்கே நாகரிகம் கற்றுத் தந்த தமிழ்த்தாயின் பிள்ளைகள் இம் மண்ணிலே நாகரிகம் தெரியாதவர்கள் எனத் தூற்றப்படுகிறார்கள். கடல் கடந்து கடாரம் முதல் கோலோச்சிய வீரத் தமிழனின் வாரிசுகள் ‘தேங்காய்க்காகவும் மாசிக்காகவும்’ நாடு கடந்தார்கள் என நகைக்கப்படுகிறார்கள்.

இத்தனை எள்ளி நகையாடுதல்களும் எங்களை நோக்கியது தான் என்று தெரியாமலே அறியாமையின் முழு உருவமாக இம் மண்ணிலே உழைத்து மடிகிறார்கள் இவர்கள். முதலாளிகளின் இலாபத்திற்காக மட்டுமே இம் மண்ணிலே இப்படி ஓர் இனம் உலாவ விடப்பட்டது. சபிக்கப்பட்ட இவ்வினத்திற்கு மீண்டும் ஒரு சாபக்கேடு ‘பிரஜா உரிமை கோரல்’ என்பதாகும்.

இம் மண்ணிலே வேர் விடத்தொடங்கிய அந்த இனத்தின் மற்றொரு பாகம் மீண்டும் இந்தியாவை நோக்கி பிடுங்கி எறியப்படுகிறது. பிரஜா உரிமை எங்களுக்கு கிடைக்கும் வரை யாரோ ஒருவரின் இலாபத்திற்காக நாம் அகதிகளாக்கப்பட்டு இருந்திருக்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால் நாங்கள் அகதிகள் என்று எங்களுக்கே தெரியாது.

இப்படி பல கண்ணீர் நிறைந்த போராட்டங்களுக்கு பிறகு கல்வி, மின்சாரம், போக்குவரத்து என்று ஒவ்வொன்றாக எங்களை நோக்கி வந்தது. ஆனால், இன்றுவரை என் சமூகத்திற்கு இச் சேவைகள் முழுமையாகக் கிடைத்திருக்கிறதா என்பது கேள்வி குறியே. அன்று வானொலி கேட்கக்கூடாது. வீட்டை முன் நகர்த்தி நிர்மாணிக்க கூடாது. மீறினால் தோட்ட நிர்வாகத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் அல்லது சம்மந்தப் பட்டவருக்கு வேலை நிறுத்தப்படும் என அர்த்தமற்ற ஆயிரம் கட்டுப்பாடுகள்.

இன்றும் கூட அந்த நிலை சற்று தளர்த்தப் பட்டிருக்கிறதே தவிர முழுமையாக நீக்கப்படவில்லை. ஏனென்றால் இன்றும் எங்களுக்கு முகவரி இல்லை. சொந்தமான காணி இல்லை. வாழும் வீட்டிற்கு உறுதிப் பத்திரம் இல்லை. கட்சிகளுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறோமே தவிர ஆழ்ந்த அரசியல் அறிவு இல்லை. ஏன் இன்றும் கூட எங்களின் குடியிருப்பின் கோலமோ அல்லது தோட்ட நிர்வாகத்தினரை ‘துரை’ என்றழைக்கும் கலாச்சாரமோ முற்றிலுமாக மாறவே இல்லை.

முந்திய காலகட்டத்தில் உலக விடயங்களை அறிய எங்களுக்கு வாய்ப்பில்லை. ஆனால் இன்று கையடக்கத் தொலைபேசியில் தொடங்கி தொடர் நாடகங்கள் வரை சிக்கி நாங்களே எங்களின் வலி, வேதனை, வரலாறு என்பனவற்றை அறியாத அறியாமையின் அகதிகளாக புலம்பிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த சமூகத்தினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற போராட்ட களத்தில் நாம் தான் முதல் வரிசையில் நிற்கும் போராளிகள். ‘அறியாமையின் அகதிகள்’ என்ற முகமூடியை நம் தலைமுறை தகர்த்தெறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

-கிருஷ்ணமூர்த்தி டிலுக்ஷி
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )