
போராட்டமே தமிழர்க்கு தீர்வைத் தரும்!
இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றார்கள். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு இத்தனை வருடங்கள் கடந்து போன நிலையிலும், இதுவரை ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள் அவர்களின் உறவுகளைக் குறித்தோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் குறித்தோ அக்கறை செலுத்தவில்லை.
கடந்து வந்த அரசாங்கங்கள் அனைத்தும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற ஒரு செயற்பாட்டை தான் இவர்கள் விவகாரத்தில் செய்து வருகின்றன. இது இவ்வாறிருக்க இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும் என ஐனாதிபதி செயலக பணிக் குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான சாகல ரத்நாயக்க யாழில் தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த கருத்தை சமூக ஆர்வலர்கள் இது எதிர்வரும் தேர்தலுக்காக அரசாங்கம் போடும் நாடகத்தின் ஒரு அங்கம் எனவும் இது கேலிக்கூத்து எனவும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இத்தனை வருட காலம் சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் மீது ஏற்படாத கரிசனை இப்போது எதற்காக வர வேண்டும்? தமிழர்களையும் அவர்களின் இன அடையாளங்களையும் பல்வேறு வழிகளிலும் அழித்து வரும் கேடு கெட்ட பேரினவாத அரசியல்வாதிகளா தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுக்க போகிறார்கள்?
மேலும் நாடு அதள பாதாளத்தில் இருக்கின்றது எனவும், புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் எனவும் சகல யாழ் மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார் அவர். அதாவது நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிக்கரம் நீட்டினால் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வு பெற்று கொடுக்கப்படும் என்று மறைமுகமாக பொருள் படுகிறது.
அரசாங்கம் தனது அரசியல் காய் நகர்த்தல்களை இவ்வண்ணமாய் மேற்கொள்கின்றது. மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தவே அரசாங்கம் மக்களின் இயலாமையை கையிலெடுத்துள்ளது என்பது இதன் ஊடாக தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
வறிய மக்களுக்கு 10 கிலோ அரிசியை கொடுத்து விட்டால் அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடுமா? இத்தனை ஆண்டு காலம் அவர்கள் இழந்து போன எல்லாவற்றையும் பெற்று விட முடியுமா? எத்தனை துன்பங்கள் எத்தனை இழப்புக்களை இந்த வடக்கு, கிழக்கு மக்கள் சந்தித்துள்ளனர்? இவற்றுக்கு ஒரே தீர்வு தான். அதாவது போர்க் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படாத பட்சத்தில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் குறைவதற்கு எந்த வகையிலும் வாய்ப்பில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்களா அல்லது வேறு ஏதாவதா என்பதனை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாகக் கூற வேண்டும். அவ்வாறு இலங்கை அரசாங்கம் இதனை திட்டவட்டமாக கூறும் பட்சத்தில், பல வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு ஏதோ ஒரு முடிவு தெரியவரும். போராட்டங்களை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோரில் பலர், இப்போது உயிரிழந்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அழைத்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஏன்ன நேர்ந்தது என்பது தொடர்பில் பேசுவதற்கு இதுவரை முன்வராத அரசாங்கமா இனிமேலும் அவர்களுக்கு நீதியை வழங்க போகின்றது. இது அத்தனையும் அரசாங்கத்தின் கண் துடைப்பு நாடகம்.
இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு அரசாங்கம் மரண சான்றிதழ் வழங்குவதென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? என்ற ஒரு கேள்வி இன்னும் மக்கள் மத்தியில் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. அத்துடன், அனைத்து கொலைகளையும் அரசாங்கமே செய்து விட்டு, அது தொடர்பில் அரசாங்கமே விசாரணை நடத்துவது என்றால், அதில் என்ன நியாயம் உள்ளது.
எனவே தான் பாதிக்கப்பட்ட மக்கள் சர்வதேச விசாரணை வேண்டும் கோருகின்றனர். ஆனால் அரசாங்கம் குற்றவாளிகளை காலம் காலமாக காப்பாற்றி கொண்டு வருவது மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் துரோகத்தை தான் செய்து வருகின்றது. இப்படி மக்களுக்கு துரோகம் செய்யும் பேரினவாத அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது என்பதை வேடிக்கையாக தான் உள்ளது.
தொடர்ந்தும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அரசின் அரசியல் தந்திரத்திற்கு ஏமாறாமல் தமக்கான நீதி கிடைக்க ஒன்றிணைந்து போராடுவதே சாலச்சிறந்தது.
-புனிதப்ரியா பன்னீர்செல்வம்.