
வெளிநாட்டு மோகத்தில் காசை இழக்கும் இளைஞர்கள்
நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக ஏராளமான இளைஞர் யுவதிகள் மத்தியகிழக்கு, மற்றும் மேற்குலக நாடுகளுக்குப் போவதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள் என்பது நாம் அறிந்த விடயமாகும் .
தங்களது வாழ்வாதாரத்துக்குத் தேவையான பொருளாதார தேடல்கள் சம்பந்தமாக எந்தவிதமான தொழில் வாய்ப்புகளும் இல்லாத சூழ்நிலையில் நாடு கடந்து சென்று இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள, ஏராளமான இளைஞர் யுவதிகள் கடவுசீட்டுகளுக்காக பல நாட்கள் காத்திருந்த விடயங்கள் நாம் அறிந்ததே .
அது அவ்வாறு இருக்க, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எனும் போர்வையில் இடம்பெறுகின்ற பண மோசடி இளைஞர்களை பெரிதும் பாதிப்படைய வைத்துள்ளது எனலாம். எவ்வாறு சரி வெளிநாடு சென்று விடவேண்டும், என்ன வேலையாக இருந்தாலும் சரி என்கிற மன நிலையில் உள்ள இளைஞர்களை ஆசைவார்த்தை கூறி அவர்களுடைய பணத்தை வாங்கிய பின்னர் அவர்களை நிர்க்கதியாக விட்ட ஏராளமான சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் போலியாக தங்களை அடையாளப்படுத்தி கொண்டு, இளைஞர்களை மிக இலகுவாக அணுகி, அவர்களிடம் எந்த விதத்திலாவது பணத்தைப் பறித்து விடவேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருப்பது என்பது மிக கொடுமையான விடயமாகும் .
இரண்டு மாதங்களுக்கு முன்னர், கொழும்பில் புற நகர்ப் பகுதியில் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது . குறித்த தொழில் வாய்ப்பு முகவர் நிறுவனம் தங்களை பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்களாக காட்டிக்கொண்டும், விளம்பரப்படுத்தி கொண்டும் மிக ஏழ்மையான நிலையில் உள்ள இளைஞர் யுவதிகளை குறிவைத்து வியாபாரத்தை ஆரம்பித்து உள்ளார்கள்.

முதலில் வேலை வாய்ப்புகள் சம்பந்தமாகவும், பிறகு கவர்ச்சிகரமான சம்பளம், பிறகு நாணயம், கட்டுப்பணம் என்பன பற்றியும் சொல்லி, பின்னர் குறிப்பிட்ட திகதியில் பணத்தையும், கடவுச்சீட்டையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
இவை எல்லாம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்த ஒரு பதிலும் இல்லாத நிலையில், வேலைக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தை தேடி சென்று கேட்ட பொழுது இன்னும் வேலைவாய்ப்பு வரவில்லை என்று அறிவித்துள்ளது .
கிட்டத்தட்ட ஒருவருட காத்திருப்பின் பின்னர் இவ்வாறான பதிலை சற்றும் எதிர் பார்க்காத இளைஞர்கள் கதிகலங்கி போய், குறிப்பிட்ட நிறுவனத்துடன் சண்டை செய்துள்ளார்கள். இது நாடளாவிய ரீதியில் இது ஒரு ஏமாற்று வேலையாக இடம் பெறுகிறது.
மேலும் சிலர் எந்த வேலை வாய்ப்புகளும் இல்லாமல் free visa முறையில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, வேலைகள் இல்லாமல், விசாக்களை மாற்ற முடியாமல், தங்க இடம் இல்லாமல், உணவில்லாமல் என பல இன்னல்களுக்கு இளைஞர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு எப்படியாவது போய்விட வேண்டும் என்று கனவு கண்டு, மிகப் பெரிய தொகை கொடுத்து ஏமாந்தவர்கள் நாட்டில் ஏராளம். குறிப்பிட்ட வேலைகளுக்கு இலங்கை அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளது. அவர்களுடன் நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு உங்களுடைய விடயங்களைக் சொல்லலாம். எவ்வகையான வேலை வாய்ப்புகள், சம்பளம் பற்றி பூரண தெளிவை பெற்ற பின்னர் நீங்கள் உங்களுக்கான விசா விண்ணப்பங்களை வழங்கலாம் .
பாரியளவு நிதி மோசடிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்கிற பெயரில் இடம் பெறுகிறது. மக்களின் வறுமையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி இவ்வாறான நடவடிக்கைள் இடப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் .
ஐரோப்பிய நாடுகளுக்குக் கூட்டிச் செல்கிறோம் என்கிற பெயரில் எதாவது ஒரு நாட்டில் விட்டு… எல்லைகள் தாண்ட வேண்டும், நதியை கடக்க வேண்டும், கடும் குளிரை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்கிற மிக அபாயகரமான பயணங்களைச் சந்திக்க நேரிடுகிறது . இது சம்பந்தமான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளன.
நாட்டின் சூழ்நிலை எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற சூழ்நிலையைத் தோற்றுவித்திருப்பது என்பது உண்மைதான். ஆனாலும் ஆபத்தான இவ்வாறான பயணங்கள் எமது பணத்தை சூறையாடுவதோடு எமது வாழ்வையும் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகிறது .
நீங்கள் வெளிநாட்டுக்கு பயணிப்பதற்கு முன்னர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். எந்த நாட்டுக்குப் போகப் போகிறோமோ அந்த நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, வேலைவாய்ப்புகள் சம்பந்தமாகவும், அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் சம்பந்தமாகவும் தெரிந்து கொள்ளுங்கள் .இவைகள் மிக பிரதானமாக நோக்க வேண்டியவை ஆகும்.
குறிப்பாக தற்போது கட்டார் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இல்லை. வெறுமனே இருபது நபர்களுக்கான வேலை வாய்ப்புக்காக நேர்முக தேர்வுக்கு இரண்டாயிரம் விண்ணப்பதாரிகள் சமூகமளித்த நிகழ்வு அன்று பதிவாகி இருந்தது.
ஆனால், இது சம்பந்தமாக எவ்வித தெளிவும் இல்லாமல் இங்கே வந்து வேலை தேடி கிடைக்காமல் மீண்டும் மூன்று மாதங்களில் நாட்டுக்கு சென்றவர்கள் எம்மிடத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே வெளிநாடு செல்லுவதற்கு முன்னர் சரியான முகவர் நிறுவனத்தை அணுகவேண்டியதும் அது சம்பந்தமாக பூரண அறிவை பெற்றிருக்க வேண்டியதும் மிக அவசியமான ஒன்றாகும் .