சிறுவர்களை தேடிக் கொல்லும் நவீனம் எனும் போதை வர்த்தகம்!

சிறுவர்களை தேடிக் கொல்லும் நவீனம் எனும் போதை வர்த்தகம்!

இன்றைய இளைய சமுதாயம் நாளைய தலைவர்களாக மாறப் போகிறவர்கள். பிள்ளைகளின் ஆரம்பம் என்பது பாடசாலை எனும் ஒரு பெரிய சமூக ஆரம்பப் படிநிலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது .

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பாடசாலைப் பராயம் மறக்க முடியாத நினைவுகளைக் கொண்டு இருக்கும். தற்போதைய மாணவ சமூகம் சமூகத்தின் பாரிய சவால்களை சந்திக்கவேண்டிய இக்கட்டான சூழலைக் கொண்டு காணப்படுகிறது. கற்றல், கற்பித்தல் விடயங்களை தாண்டி ஒரு மாணவனின் வாழ்வில் பொழுது போக்கு விடயங்கள் பாரிய தாக்கத்தைச் செலுத்தும். சமூகத்தை புரிந்து கொள்ளவும், சமூகத்தோடு பழகவும், சமூக விழுமியங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்தப் பொழுது போக்கு விடயங்கள் இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்பது உண்மையே.

தற்கால மாணவ சமூகம் நிகழ்கால விடயங்களைத் தொலைத்து, கனவு உலகில் தங்களை கதாநாயகர்களாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கனவு உலகம் மிகவும் அபாயகரமான நாளைய சமூகத்தை உருவாக்க்க கூடியது. இது சினிமாவாகவும், தொலைபேசி விளையாட்டாகவும் இளைய சமூகத்தின் மீது திணிக்கப்படுகிறது.

ஒரு கால கட்டத்தில் போதை பொருள் கடத்தல் ,அல்லது அது சம்பந்தமான நடவடிக்கைகள் சமூகத்துக்கு பெரும் கேடாக சினிமாக்களில் காட்டப்பட்டது. ஆனால் இன்றைய சினிமாக்கள் அது ஒரு ஹீரோயிசமான வேலையாக காட்டுகிறது, இது இளையவர்கள் மத்தியில் பாரிய ஒரு பிற்போக்கான பாதிப்பை ஏற்படுத்துகிறது. கணனி அல்லது தொலைபேசி ஆன்லைன் விளையாட்டுகளில் ஹீரோவாக காட்டப்படும் அந்த உருவம் கூட ஒரு கரடுமுரடான, இரத்தக்கறை படிந்த ஒரு உருவமாகவும், அவனைச் சுற்றி உள்ள சூழல் போதை பொருள் சம்பந்தமாகவும் இருப்பதாகவே காட்டப்படுகிறது .

இவ்வாறான விளையாட்டுகளில் குறிப்பிட்ட உருவங்களை தாங்களாகவே உருவகப்படுத்திக் கொள்ளும் பிள்ளைகள் தங்கள் மன நிலையில் தங்களை அந்த போலி உருவங்களாக சிந்தித்து நடக்கவேண்டிய கட்டாயத்துக்கு இந்த விடயங்கள் காரணமாக அமைகிறது.


கடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு பகுதிகளில் பிடிபட்ட சில சட்டவிரோத அமைப்புகளின் உறுப்பினர்கள், மிகவும் சிறு வயதினராகவே இருக்கிறார்கள். ஆக, ஒரு சமூகம் எதிர்காலத்தில் எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுக்கப்போகிறோம் என்பதை பற்றிய கவலைகள் இல்லாமல் கனவு உலகில் தங்களை மறந்து இருக்க இவ்வாறான விடயங்கள் காரணமாக அமைகின்றன.

இந்த விடயங்களில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது எவ்வாறு தாக்கத்தை செலுத்துவது என்பதில் கூட உள ரீதியான பிரச்சனைகள் உள்ளன. தனது பிள்ளை இவற்றை பாவிக்கிறானா அல்லது இவைகள் எல்லாம் போதை பொருளா என்கிற ஒரு குழப்ப நிலையை கூட இந்த விடயங்கள் பெற்றோரிடத்தில் ஏற்படுத்தும். ஆக, ஒரு சமூகத்தின், மாற்றம் என்பது சிறுவர்கள், இளைஞர்களின் மாற்றமாகவும் சிறுவர்களின், இளைஞர்களின் புரிதல் என்பது நாளைய சமூகத்தின் வெளிப்பாடாகவும் அமையும்.

இது இவ்வாறு இருக்க இந்த நடவடிக்கைளை மையமாகக் கொண்டு போதைப் பொருள் வர்த்தகம் என்பது பரவலாக இடம்பெறுகிறது.
ஒரு வர்த்தகத்தின் ஆரம்பம் அந்த பொருளின் மீது மக்களின் ஆர்வத்தை தூண்டுவது ஆகும். ஆகவே இவ்வாறான விடயங்கள் மூலம் போதைப் பொருள் பற்றிய சிந்தனைகளை இளையவர்கள் மீது திணித்து அதன் மூலம் தமது வியாபார உத்திகளை யாரோ ஒருவர் எங்கோ இருந்து இயக்குகிறார் என்பதை சமூகம் புரிந்து கொள்ள சில நாட்கள் எடுக்கும்.

போதைப் பொருட்கள் என்றால் பெரும் செலவில் வாங்குவதை தவிர்த்து, நமது ஊர் வியாபாரிகள் மாணவர்களை குறிவைத்து சிகரெட், பீடி, கஞ்சா, பாக்கு, புகையிலை, தூள் (மூக்குப்பொடி) போன்ற பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இது சம்பந்தமாக காவல் துறை நடவடிக்கை எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை என்பதே உண்மை.
இவைகளை பாவித்தால் சமூகத்தில் தனக்கு மதிப்பு, தான் ஒரு தாதா என்கிற ஒரு மனநிலைக்கு இவர்களை மாற்றியமைக்க ஒரு பெரிய வர்த்தக கோர்வையை இந்த சமூகம் மாற்றியுள்ளது .

நாம் சாதாரணமாக கடந்து போகும் சிறு விடயங்களில் மிகப்பெரிய பாதிப்புகள் உள்ளதை நாம் உணரவேண்டும். இதற்காக ஒட்டுமொத்த விடயங்களையும் நான் குறை சொல்லவில்லை. ஆனால், அவற்றைத் தேட வேண்டிய கட்டாயம் உள்ளதை உணரவேண்டும். சமூகத்தில் இது சம்மந்தமாக உரையாடல்கள் அதிகமாக வேண்டும். இது சம்பந்தமாக விழிப்புணர்வுகள் பரப்பப்பட வேண்டும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது கனவு உலகத்தில் வாழும் சிறுவர்களோ முதலில் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளும் அளவுக்கு சமூகத்தை மாற்ற வேண்டியது பெற்றோர்களின், சமூகத்தின் தலையாய கடமையாகும்.

சமூக நடவடிக்கை, அல்லது விளையாட்டு போன்றவற்றில் சிறுவர்களுக்கான ஆர்வத்தைத் தூண்ட வேண்டியதும், அதிகப்படியான தொலைபேசி அல்லது கணணிப் பாவனையை மட்டுப்படுத்துவதும் மிக அவசியமான ஒன்றாகும். இவற்றைக் கட்டுப்படுத்துவது மிக இலகுவான விடயமல்ல. சிறுவர்களுக்கான புரிதல் என்பது மிகவும் குறைவு. எது சொன்னாலும் அவற்றை தவறாக புரிந்து, சொல்லுவதற்கு நேர் எதிர் திசையில் பயணிக்கும் மனப்பாங்கு உள்ள வயது. அதைப் பக்குவப்படுத்தி, ஒரு புரிதல் நிலைக்கு கொண்டு வந்து, அவர்களுக்கான விழிப்புணர்வுகளை வழங்குவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

  -அருண் செல்வராஜ்
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )