
நவீன உலகமும் குழந்தைகளும்
தாம் பெற்றெடுத்த குழந்தைகள் எவ்வாறு வளர வேண்டுமென கருவுற்ற நாளிலிருந்து பெற்றார் கனவு காணத் தொடங்கி விடுகின்றனர். பிள்ளைகளை நற்பெயருடையவனாக,அறிவில்சிறந்தவனாக, எல்லோருக்கும் உதவும் மனித நேயமிக்கவனாக,மற்றவருக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமெனவே பெரும்பாலான பெற்றோர் கனவு காண்கின்றனர். சிறு வயதில் நாம் கற்றுக் கொடுக்கும் நற்பண்புகள், பழக்க வழக்கங்கள், கல்வியறிவு, பெரியவர்களை மதிக்கும் தன்மை ,மற்றவர்களுக்கு உதவுதல் என்பன அவற்றில் சில. இத்தகைய நற் பண்புகளை வளர்ப்பதில் கூடுதலாக அக்கறை காட்டுபவர்கள்
பெற்றவர்களின் பெற்றோராகும்.அன்றைய கால கூட்டுக்குடும்ப வாழ்கை மிகச் சிறந்ததாகும்.
நவீன யுகத்தில் கூட்டுக்குடும்பம், தனிக் குடும்பமாகி, தம் தேவைகளுக்கு ஏற்ப பெற்றவர் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில், பிள்ளைகளை பராமரிப்பு நிலையத்திலோ,அல்லது வேறு ஒருவரின் தயவில் விட வேண்டியுள்ளது. எப்படி வளர்ந்தாலும்,உரிய காலங்களில்,உரிய நேரங்களில் கிடைக்க வேண்டிய பெற்றவர் அரவணைப்பு பிள்ளைகளுக்கு கிடைக்காமல் போகிறது. அத்துடன் வீட்டில் இருக்கும் காலங்களில் கூட தம் பிள்ளைகளுடன் நேரங்களை செலவழிப்பது என்பது குதிரைக் கொம்பாகி விட
பிள்ளைகள் தம் நேரங்களை தொலைக்காட்சி பார்ப்பதிலும்,கணிப்பொறி மூலம் விளையாடுவதிலும்,பசிக்கும் போது நொருக்குதீனி சாப்பிடுவதிலும், அடம் பிடித்து தம் காரியத்தை சாதிப்பதிலும் உள்ளனர்.பெற்றவர்களும் இது பிள்ளை பராமரிப்பதற்கான ,சிறந்த வழி என எண்ணுகின்றனர்.வீட்டிலிருக்கும் நேரத்தில் கூட,பிள்ளைகளுடன் உரையாட நேரமின்றியிருக்கும் பெற்றோரே அதிகம்.
பெற்றோர்கள்! ஒரு கணம் சிந்தியுங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்காது, தங்களது வருமானங்களுக்காக உருவாக்கப்படும் சீரியல்
தொடர்களை பார்க்கா விட்டால் ஏதோ பெரிய பிரச்சினையாக பிள்ளைகள் மீது கோபப்படும் பெற்றோரே அதிகம். பிள்ளைகளை சிறந்த நற் பிரஜைகளாக உருவாக்குவதைவிட வேறெதுவும் முக்கியமில்லை என உணர வேண்டும். பிள்ளைகள் பெற்றவர் அரவணைப்புக்காக ஏங்கி இருக்கும் போது, அது அவர்களுக்கு பூரணமாக கிடைப்பதில்லை. மாறாக கடுகடுவென பேசும் பெற்றோர்களே அதிகம். இது உண்மையான கருத்தாவென கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள் புரியும். இதனால் பெரும்பாலான பிள்ளைகள் தம் அறையை விட்டு வெளி வராது கணிப்பொறியுடனே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் பசியின் போது நொறுக்கு தீனிகளை உட் கொண்டு உடற் பருமனாகவும், சுறுசுறுப்பற்றவர்களாகவும், பிடிவாதம், முரட்டு கோபம் என்பன உள்ளவர்களாக உருவாகின்றனர்..அத்துடன் பிள்ளைகளை படியான அறைக்குள் முடக்கிவிட்டு,பெரிய ஒலி வடிவில் தொலைக்காட்சியைப் பார்க்கும் போது,பிள்ளைகள் பொறுமையிழந்து, சலிப்பு தன்மையுடன் வளர்கிறார்கள். இது இவர்கள் உள வளர்ச்சியை பாதிப்பதுடன், தம்மை மற்றவர் கவனிக்க வேண்டுமென்பதற்காக சிறு சிறு குழப்படிகள் செய்து, அதுவே அவர்கள் வாழ்வின் தினம் தினம் நடைபெறும் நிகழ்வாக மாறி விடுகின்றது.
அன்று கூட்டுக்குடும்பங்களின் கண்காணிப்பு காணப்பட்டதால் பழக்க வழக்கம், பண்பாடு,கலாச்சார முறைகள் சொல்லி வளர்க்கப்பட்டதால், பிள்ளைகள் தம் குடும்ப கஷ்ட நஷ்டங்கள் உணர்ந்த நற் பிரஜைகளாகளாக உருவானார்கள். ஆனால் இன்று தனிக் குடும்பங்களில் குழந்தைகளின் தேவைகள் எளிதில் பூர்த்தியாவதால் ,அவர்களுக்கு பொருட்கள் மதிப்பு, பெற்றவர் கஷ்டம் ஏதும் அறியாமலே ‘கண்டதே காட்சி,கொண்டது கோலம்’ என பணத்தின் மதிப்பு தெரியாமலும்,மற்றவர்களை மதிக்கும் தன்மை தெரியாமலும் உள்ளார்கள். இவ் சூழலில் வளரும் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதே இல்லை.பெற்றவர்களே பிள்ளைக்கு பயந்து வாழும் சூழல் காணப்படுகிறது. கீழ்படியாத பிள்ளைகள் நாளைய சமுதாய வளர்ச்சியில்,தம் சுய தேவையைக் கூட பூர்த்தி செய்ய இபலாநிலை காணப்படும்.
எனவே நவீன யுகத்தில்,இயந்திரவியல் உலகில் வாழ்ந்தாலும் ,நாம் பிள்ளைகளுடன் செலவளிக்கும் நேரம் இன்றியமையாததாகும் வீட்டில் முடிந்தவரை அவர்களுடன் நேரத்தை செலவிட்டு, நல்வழிப்படுத்தும் அவசியமானதே. அத்துடன் தம் வாழ்கை அனுபவம,கடந்து வந்த பாதையில் நாம் சந்தித்த நல்லவை, கெட்டவை. அவற்றை கடந்து வந்த அனுபவங்களை எல்லாம் பிள்ளைகள் புரியும்படி கூற வேண்டும்
அது மட்டுமல்ல நற்பண்புகள்,பழக்க வழக்கங்கள், உறவு முறைகள், கலாச்சாரம், மனித நேயம் போன்ற பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும். அத்துடன் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்த ஊக்குவிக்க வேண்டும்.புத்தகம் போன்ற நல்ல நண்பன் வேறெதுவும் இல்லை. எனவே நாளைய சமுதாயத்தை நல்வழியில் உருவாக்க பெற்றோர்களே முன்வர வேண்டும்.