
உலக அகதிகள் நாள்
– வானிலா –
உறவுகளை இழந்தவன் அனாதை…..
பிறந்து வளர்ந்த மண் இழந்தவன் அகதி…….
என்று சொல்லப்படுவதுண்டு.
ஆண்டுதோறும் ஜூன் 20 ஆம் திகதி உலக ஏதிலிகள் நாள் நினைவுகூரப்பட்டு வருகின்றது. சொந்த நாட்டை விட்டு, இருக்கும் சிறிய சேமிப்பையும் இருப்பிடத்தையும் உறவுகளையும் சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு, ஒருவர் வேறுநாட்டிற்குப் பயணிக்கின்றார் என்றால் அவர்களின் கையறு நிலையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பிழைத்தால் போதும் என்பதைத் தாண்டி அந்தப் பயணத்தில் வேறு எந்தவொரு இலட்சியமும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
உலக ஏதிலிகள் தினமானது முதலில் ஆபிரிக்க அகதிகள் நாளாகவே அனுஷ்டிக்கப்பட்டது. பின் மார்கழி 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின் படி புகலிடம் கோருவோர்க்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முதன்முறையாக ஜூன் 20, 2001 ஆம் ஆண்டு உலக அகதிகள் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. உலக புகலிடம் கோருவோர் என்போர் பல்வேறு சூழலில், மோதல்களில் சிக்கி அகதிகளாக, தாம் வாழும் நாட்டிலும் பிற நாடுகளிலும் புலம்பெயர்ந்து, பல இன்னல்களை அனுபவிக்கும் ஏதிலிகள். இவர்கள் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ( UNHCR ) ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்திற்கான கருப்பொருளைத் தீர்மானிக்கின்றது. அது போல் இந்த ஆண்டும் கருப்பொருள் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான கருப் பொருளாக நாம் சேர்ந்துதேர்ந்து வெற்றி காண்போம்
(Together we heal, learn and shine) என்பதை ( UNHCR ) வெளியிட்டுள்ளது.
தாய் நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. போர்ச்சூழல் காரணமாகவும், பாதுகாப்பின்மை காரணமாகவும் உலகம் முழுவதும் சுமார் 79.5 மில்லியன் கணக்கிலான மக்கள் ஏதிலிகளாக இருப்பதாகவும் அதில் 26 மில்லியன் பெண்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் என்பதும் 2020 ஆம் ஆண்டின் கணிப்பு. மேலும் கண்சிமிட்டும் அதாவது ஐந்து நொடிக்கு ஒரு முறை ஒரு அகதி தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் வேறு நாட்டில் தஞ்சம் அடைகின்றார் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
பொதுவாக புகலிடம் கோருவோர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் ஆன அகதிகள், வங்கதேசப் போர், ஆப்கானிஸ்தான் போரினால் உருவாகிய ஏதிலிகள், திபெத் அகதிகள், பர்மா அகதிகள், இலங்கை தமிழர்கள் ஆகியோர் ஏதிலிகள் பட்டியலில் உள்ள மக்கள் ஆவார்கள்.
இந்தப்பட்டியலில் உலகம் முழுவதும் 54 நாடுகளில் இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். உலகின் அதிக நாடுகளில் ஏதிலிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று யுனிசெஃப் ( UNICEF ) கூறியுள்ளது. இந்த ஆண்டிற்கான அதாவது 2021 ஆம் ஆண்டின் கருப்பொருள் Together we heal என்பது அனைவரும் ஒன்றாக சேர்ந்து வலிகளை குணப்படுத்துவதாகும். புகலிடமற்றோராக பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள் முதல் நிலையாக மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். மற்றும் இரண்டாம் நிலையாக சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் மனநல சுகாதார சேவைகள் என்பன அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை UNHCR வலியுறுத்துகின்றது.
Together we learn என்பது ஒன்றிணைந்த கல்வி. பல்வேறு காரணங்களால் தாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ளது. அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதே இந்த ஆண்டின் உறுதிப்பாடாக உள்ளது. குழந்தைகள் தரமான கல்வியை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் சிறந்து விளங்கும் என்பது உறுதியான ஒரு விடயமாக உள்ளது. Together we shine என்பது ஒன்றாக நாம் பிரகாசிப்போம், ஒளிருவோம் என்பதாகும். நாட்டை விட்டு வெளியேறியோர் கல்வியால் மட்டுமல்லாமல் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்க வேண்டும். விளையாட்டு என்பது மன ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது, மற்றும் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தருகின்றது.
இதன் மூலம் இந்த ஆண்டின் நோக்கமாக புகலிடமற்றோர் அனைவரும் சுகாதாரம், கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி அவர்களின் எதிர்காலத்தை அவர்களே கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வெளியேறுவது மிகப்பெரிய துயர். அதுவும் போரால் தம் உறவுகளை பிரிந்து, கிடைக்கும் இடத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டிய சூழல் கொடுமையானது. கோடிக்கணக்கானோர் இந்த கொடுமையை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் வலிகளை மற்றவர்களும் உணர்ந்து, இணைந்து செயல்பட வேண்டும்.
பிறந்த மண்ணை
எல்லை கடந்தாயிற்று…..
பெயரறியா மண்ணில்
வாழ்க்கை தொடர்ந்தாயிற்று…..
கசக்கி எறிந்த காகிதம் போல
கவலை தோய்ந்த முகங்கள் காட்டாமல்………..
சாதனைகளால் வேதனைகளை
கடந்து செல்வோம்……