வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களிற்கு 3 புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களிற்கு 3 புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

மூன்று புதிய ஆளுநர்கள் நேற்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாண ஆளுநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்தவர். இவர் வடக்கு மாகாண ஆளுநராக 2020 ஜனவரி 2 முதல் 2021 அக்டோபர் வரை ஏற்கனவே பதவி வகித்திருந்தார். அத்துடன் வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களின் அரச அதிபராகவும் பதவி வகித்ததுடன் 2017 செப்டம்பரில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் 2019 நவம்பரில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை அடுத்து, சுகாதாரத்துறை மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்திருந்தார்.

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுள்ள செந்தில் தொண்டமான் .இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராவார்..அத்துடன் இளம் வயதில் ஊவா மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர், பிரதமரின் இணைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர்.

வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பாராளுமன்ற முன்னாள் உறுப்பினராவார். இவர் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்திருந்தார். அத்துடன் இவர் தற்போதைய பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் சகோதரராவார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )