
பிக்குகள் வேடத்தில் கிறிஸ்தவ போதகர்கள்; சந்தேகம் கிளப்பும் ஞானசார தேரர்
பிக்குகள் வேடத்தில் காவியுடை அணிந்த கிறிஸ்தவ மத போதகர்களும் இருக்கின்றனர் என்றும், அவர்கள் விகாரைகளில் இருந்து கொண்டு ஜெரோம் பெர்ணான்டோ போன்றவர்களிடம் மருத்துவத்திற்காக செல்கின்றனர் என்றும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
பிக்குகள் வேடத்தில் காவியுடை அணிந்த கிறிஸ்தவ மத போதகர்களும் இருக்கின்றனர். அவ்வாறானவர்களின் பெயரைக்கூட வெளியிட முடியாத நிலைமையே உள்ளது. அவர்கள் குழுவாக இருப்பவர்கள். அவர்களின் பெயர்களை கூறும் போது ஏற்படும் பாதிப்பு வேறாகும். விகாரைகளில் இருந்து கொண்டு, ஜெரோம் பெர்ணான்டோவிடம் மருந்து பெற்றுக்கொள்ள செல்லும் பிக்குகளும் உள்ளனர்.
இதற்கு அப்பால் வழக்கறிஞர்களும் உள்ளனர். சிறிய கூட்டமே அது. மதம் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வர முயன்ற போது சட்டமா அதிபர் திணைக்களம் எப்படி செயற்பட்டுள்ளது. குட்டி வத்திக்கான் போன்றே அந்த திணைக்களம் உள்ளது. சிங்கள பௌத்தர்களின் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு சட்டமூலத்தை நிறைவேற்ற சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதா? இதுவொரு மாபியாவே. இதனை மாற்றுவதற்காக தனியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
கிரிக்கெட்டிலும் இது உள்ளது. எப்படி குறிப்பிட்ட ஓவரில் குறிப்பிட்ட பந்தில் காயமடைவார் அல்லது ஆட்டமிழப்பார் என்று எவ்வாறு ஜெரோம் பெர்ணான்டோ சரியாக கூறுவார். இதுவொரு மாபியாவே. கிரிக்கெட் என்பது குதிரை பந்தய சூதாட்டமாகியுள்ளது. ஜெரோம் போன்றவர்கள் இதில் பங்குதாரர்கள். நடிகர்கள், அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். இதனால் இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

