
மனித உரிமைகள் – பாகம்-2
இது பற்றி பேசாதவர்கள் கிடையாது. இது பற்றி அரசுகளும் அமைப்புக்களும் மேலும் விரிவாக சொல்லுவார்கள். இதுபற்றி மேற்கு நாடுகளில் ஒரு நூறு ஆண்டுகளுக்கு பேசப்பட்டாலும், 1948 இல் UDHR என்று சுருக்கமாக அழைக்கப்படும் “அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்” (Universal Declaration of Human Rights) ஐநா பிரகடனப்படுத்திய பின்னர் தான் இது உலகளாவிய கவனத்தை பெற்றது. இதில் 30 மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மனிதர் யாவருக்கும் ஒரே மாதிரியாக இந்த உரிமைகள் உள்ளன. இந்த உரிமைகள் நாட்டின் சட்டங்களில் பிரதிபலிக்க வேண்டும். அதில் சொல்லப்பட்ட உரிமைகளில் பின்வருவனவும் அடங்கும். உயிர் வாழ்வதற்காக உரிமை, அடிமையாக இல்லாமல் இருப்பதற்கான உரிமை, சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை, சட்டத்தின் முன் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை, கல்வி கற்பதற்கான உரிமையும் எல்லோருக்கும் இலவச ஆரம்ப கல்வி உரிமையும், உணவு உடை இருப்பிடம் உரிமை, வேலை செய்யும் உரிமை, ஓய்வு நேரமும் விடுமுறைகளுக்கும் உரிமை என்று நீள்கிறது இந்த பட்டியல்.
உலககளாவிய மானிட சமூகத்தில் மனிதர்கள் யாவரும் ஒரேயளவு சிறப்பு பொருந்தியவர்கள் என்ற எண்ணத்தை பரப்பியதில் இந்த பிரகடனத்தின் பங்கு அதீதமானது. இந்த “மனித உரிமைகள்” என்பதன் கருவூலமே ஐநா தான். இக்கட்டுரை மையநீரோட்டத்தில் மனித உரிமைகள் என்ற கருத்தாக்கம் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதையே பேசும்.
ஐரோப்பாவில் அடுத்தடுத்து 30 ஆண்டுகளுக்குள் நடந்த இரண்டு போர்கள் உலகப் போர்கள் என்று அழைக்கபடுகின்றன. முதலாம் உலக போருக்கு பின் “நாடுகளின் கூட்டு” (League of Nations) என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முக்கிய நோக்கங்களாக போர்களை தவிர்ப்பதும் தடுப்பதும் அமைதியை நிலை நாட்டுவதும் இருந்தன. அதன் நோக்கத்தில் அது வெற்றி அடையாததால் இரண்டாம் உலக போருக்கு பின்னர் அது கலைக்கப்பட்டு 1945 இல் 51 நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.
ஐநா உருவாக்கப்பட்ட போது அதன் நோக்கங்கள் – உலகில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவது, நாடுகளுக்கிடையே நட்பை வளர்ப்பது, சமூக மேம்பாட்டை வளர்ப்பது, வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது, மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது என்பனவாகும். இன்று ஐநாவின் கட்டமைப்பை இப்படம் விளக்குகிறது. இதன் நான்கு முக்கிய பகுதிகளாக இருப்பவை
1) ஐநா பொதுச்சபை
2) ஐநா பாதுகாப்புச்சபை
3) ஐநா செயலகம் மற்றும்
4) பொருளாதார சமூக கவுன்சில்.
அதில் நமக்கு பழக்கமான மனித உரிமை கவுன்சில் ஐநா பொதுச்சபையின் கீழும், மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் ஐநா செயலகத்தின் கீழும் இருப்பதை பார்க்கலாம். இதுதான் மனித உரிமைகள் பள்ளி கொண்டிருக்கும் கருவூலம்.
UDHR அதாவது அனைத்துல மனித உரிமைகள் பிரகடனப்படுத்திய பின்னர் இன்னும் பல மனித உரிமைகள் சார்ந்த பிரகடனங்களை ஐநா செய்தது. அவற்றில் கீழே தரப்படுபவை முக்கியமானவை. இவற்றிலும் முதல் மூன்றும் மிக முக்கியமானவையான கருதப்படுகின்றன.
ICERD (1965) – இனரீதியான பாகுபாடுகளை களைவதற்கான ஒப்பந்தம்
ICCPR (1966) – சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒப்பந்தம்
ICESCR (1966) – பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான ஒப்பந்தம்
CEDAW (1979) – பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் பாகுபாடுகளை களைவதற்கான ஒப்பந்தம்
CAT (1984) – சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமாகவும் ஒருவரை இழிவாக கையாளும் தண்டனைகளுக்கு எதிரான ஒப்பந்தம்
CRC (1989) – சிறுவர்கள் உரிமைகளுக்கான ஒப்பந்தம்
ICMW (1990) – புலம்பெயர்ந்து தொழில் செய்வோரினதும் அவர்கள் குடும்பத்தினரதும் உரிமைகளுக்கான ஒப்பந்தம்
CPED (2006) – காணாமல் ஆக்கப்படாமல் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம்
CRPD (2006) – மாற்று வலுவுள்ளோர் உரிமைகளுக்கான ஒப்பந்தம்
இவையெல்லாம் அழகாகத்தான் இருக்கின்றன ஆனால் இவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று நீங்கள் கேட்கலாம். ஐநா உறுப்பினராக உள்ள நாடுகள் இவற்றை ஏற்றுக்கொள்வதாக கையொப்பமிடும். (சிறீலங்கா ஏற்றுக்கொண்ட ஒப்பந்தங்களின் பட்டியலையும் இங்கு பார்க்கலாம்.) அதன் பின்னர் அதை ஏற்றுக்கொண்ட நாடுகளில் மட்டும் அவை பின்பற்ற படுகின்றனவா என்று ஐநா கண்காணிக்கும். மனித உரிமை பிரகடனங்களில் கைச்சாத்திட்ட நாடுகள் தங்கள் சட்டங்களிலும் அவற்றை உள்ளடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவறுகள் நடந்தால் ஐநா அதை வெளிப்படுத்தும் அவ்வளவுதான். இதற்கு மேல் ஐநாவுக்கு அதிகாரமோ பலமோ கிடையாது. ஆனால் மேற்குலகம் நினைத்தால் மட்டுமே ஐநாவை ஆதாரமாக கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஐநாவின் முடிவென்பது ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து வல்லரசுகளின் (ஐ-அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ரசியா, மற்றும் பிரான்ஸ்) முடிவுதான். அண்மைக் காலங்களில் ஐ-அமெரிக்காவும் மேற்குலகமும் சேர்ந்து தன்னிச்சையாக ஐநாவுக்கு வெளியேயும் இராணுவ நடவடிக்கைகள் எடுத்த சம்பவங்களும் அதிகம் உண்டு.
இதையும்விட, ஐநாவுக்கு வெளியே உருவாக்கப்பட்ட ஜெனிவா பிரகடனங்கள் போர்க்காலத்தில் இடம்பெறும் கொடுமைகளை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டன. இவற்றை கண்காணிக்க ஐசிஆர்சி என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. அப்பிரகடனங்களையும் ஏற்று நாடுகள் கையொப்பமிட்டன.
மனித உரிமைகள் பற்றி இலகு தமிழில் படிப்பதற்கு இணையத்தில் அதிகம் கிடைப்பதில்லை. ஐநா வின் மொழியாக்கங்கள் கொடூரமான தமிழிலேயே உள்ளன. அதுவும் அரிதாகவே உள்ளன. Vikaspedia என்பது இந்திய அரசால் பொதுமக்களுக்கு தகவல் கொடுப்பதற்காக நடத்தப்படும் இணையம். இதில் தமிழ் மொழியிலும் படிக்கலாம். மனித உரிமைகள் அறிமுகம்; மனித உரிமைகளின் வகைகள் மற்றும் மனித உரிமைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள 30 உறுப்புகள் என்ற மூன்று தகவல்கள் படிக்ககூடியவை.
மனித உரிமைகள் பற்றி பேசும் போது அரசசார்பற்ற இரண்டு மனித உரிமை அமைப்புக்களையும் குறிப்பிட வேண்டும். அவைதான் சர்வதேச மன்னிப்பு சபையும், மனித உரிமை கண்காணிப்பகமும். இவற்றையும் விட ஏராளமான மனித உரிமை அமைப்புக்கள் உலகில் இயங்குகின்றன. மனித உரிமையை ஒரு தொழிலாக்கியதில் இவைகளின் பங்கு முக்கியமானது என்று சொல்வார்கள். இருந்தும், மேலே குறிப்பிட்ட ஒப்பந்தங்களில் ஒரு இனத்தின் உரிமைக்காக போராடும் எம்மைப்போன்ற மக்களுக்கு அவசியமானது ICESCR எனப்படும் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான ஒப்பந்தம். உலகில் பெரிதாக அறியப்பட்ட எந்தவொரு மனித உரிமை அமைப்பும் ஐநா உட்பட இந்த ஒப்பந்தத்தை கண்டு கொள்வதில்லை. இதைக்கண்டு கொள்வது கடினமானது என்பது அவர்களின் வாதம்!!
மனித உரிமைகள் என்ற கருத்தாக்கம் மையநீரோட்டத்தில் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை இக்கட்டுரை விபரித்தது.