
யாதுமாகி……யாவுமாகி….
-பாரி-
‘பட்பட்பட்……ட்ட்ட்…..பட்…பட்பட்….பட்ட்ட்ட்ட்…’
சற்றுக் கிட்டத்தில் எங்கோ வெடிச்சத்தம் கேட்டது. இன்றைக்கு தும்பிகளின் நடமாட்டம் கொஞ்சம் அதிகம்தான். வெளியில் வந்து பார்த்தபோது, ஒரு உலங்கு வானூர்தி கண்ணாம்பற்றைப் பக்கமாக சுற்றிச் சுற்றி சுடுவது தெரிந்தது.
‘எதையோ பார்த்து வெருண்டிட்டாங்கள் போல….ஆனா….ஏன் இண்டைக்கு இப்பிடி ஓடித்திரியினம்?………எங்கையாவது அடி விழுந்திட்டுதோ……?’
சற்று நேரத்தில் தும்பிகள் ஒவ்வொன்றாக கிழக்குப் பக்கமாக போய் மறைய ஆகாயம் அமைதியானது. அசாதாரண அமைதி. ..எதையோ காத்துக் கிடப்பதைப்போல.
திரும்பி எதிர்ப்புறமாகப் பார்த்தேன். தூரத்தில்…ஒழுங்கையில் அம்மா கடகத்துடன் வருவது தெரிந்தது. கடகத்தில் புல்லுக்கட்டைக் காணவில்லை. அப்ப, ஏன் போனா? இந்த மத்தியானப் பொழுதில் ஆராவது தோட்டத்துக்கு புல்லுப் புடுங்க போவினமா?…..அம்மா இப்ப கொஞ்ச நாளா ஏன் ஒரு மாதிரி நடந்து கொள்ளுறா? விடை தெரியாத கேள்விகள். சில நாட்களாகவே அம்மா இப்பிடித்தான்…எந்தக் கைவேலையிலும் அடிக்கடி எட்டி படலையைப் பாப்பாள்.
‘ஆரோ வாற மாதிரி இருந்துது….’ என்று தனக்குள்ளே முணுமுணுப்பாள்.
மனம் எதையோ நினைத்து எங்கோ உழன்று கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
கடகத்தைக் கீழே போட்டுவிட்டு ஆயாசத்துடன் திண்ணையில் உட்கார்ந்தாள் அம்மா.
“இந்தாணை!!….. இந்தத் தேத்தண்ணியைக் குடி…! இந்த வெயிலுக்கை ஏன் போனனீ?
அம்மா அதையெல்லாம் பொருட்படுத்தேல்லை.
“ஆரும் வந்தவையே…?” ஒருவித கலக்கம் குரலில்.
“ஆர்…..?”
பதில் எதுவும் சொல்லாமல் தூணில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டாள்.
ஒட்டிய முகமும் ஒளியிழந்த கண்களுமாக ..அம்மா எப்படி மாறிப்போனாள். இப்படியா இருந்தாள் முன்பு? எந்த வேலையிலும் ஒரு நேர்த்தி. எதிலும் நிதானம். தீர்க்கமாக முடிவெடுப்பாள் அம்மா. அப்பாவுக்கு அதெல்லாம் ஒரு பெருமை. அந்தப் பெருமையெல்லாம் அண்ணா வீட்டை விட்டுப் போகும் மட்டும்தான்.
“காலத்தின் தேவை அம்மா. இப்பிடியே சும்மா இருந்து நாங்கள் அழிஞ்சு போகேலாது…. நீங்கள் ரெண்டு பேரும் என்னைச் சரியாத்தான் வளத்திருக்கிறீங்கள்.”
கிளம்பிப் போகுமுன் அண்ணா உறுதியாகச் சொல்லிவிட்டான். விடயம் உண்மையானதுதான். ஆனால் தனக்கென்று வரும்போது அம்மாவும் அப்பாவும் நிலைகுலைந்து போனார்கள். எனக்கு புரிந்தும் புரியாத நிலை. அதுக்குப் பிறகு கொஞ்சக் காலம் அம்மா மறைவா அழுவா, அப்பா தேற்றுவார். பிறகு அப்பா இடிஞ்சுபோய் இருப்பார், அம்மா ஆறுதல் சொல்லுவா. நானும், அண்ணை இல்லாத வீடு வீடே இல்லை என்று நினைப்பன்.
கொஞ்சக் காலம் கழிச்சு… அண்ணா வந்தான். சாரமும் சேட்டும் போட்டிருந்தான். மாறியிருந்தான். திடமான சிந்தனையுடன், தெளிவாக ஒரு பெரிய மனுசன் போல இருந்தான். அம்மாவும் அப்பாவும் பூரித்துப் போயினர். பக்கத்திலயே இருந்து தடவித்தடவி அம்மா சாப்பாடு குடுத்தா. இல்லாத தாடியை அப்பா பெருமையோட நீவி விட்டுக்கொண்டார். எனக்கு கொஞ்சம் மன வருத்தம்தான். எல்லாரையும் போல அண்ணா ஏன் சீருடையும் சப்பாத்தும் போடேல்ல? ஒவ்வொரு வேலையையும் வேறவேற மாதிரி செய்யவேணும் என்றார் அண்ணா. எனக்கு விளங்கின மாதிரியும் இருந்தது விளங்காத மாதிரியும் இருந்தது.
முகாமில இருந்து ‘அவன்’ அடிக்கிற ‘ஷெல்’ எங்கட ஊரிலையும் வந்து விழும். ரெண்டு மூண்டு தரம் கிபிரும் புக்காராவும் அடிச்சுது.அடிக்கடி தும்பியள் வந்து சுட்டிட்டுப் போகும். றோட்டுக்கரை தோட்டத்தில வேலை செய்து கொண்டிருந்த சிலபேர் செத்துப் போச்சினம். அது ஊருக்குள்ள கொஞ்சம் பயத்தைக் கிளப்பிச்சுது. எங்க பார்த்தாலும் பதுங்கு குழி தோண்டிச்சினம். நாங்களும் வீட்டிலை ஒன்று கிண்டியிருந்தம். அதுக்குப் பிறகு நிறையச் சண்டையள். ஊருக்கையும் நாலைந்து வித்துடல்கள் வந்துது. ஒவ்வொரு தரமும் வித்துடல் வர நெஞ்சமெல்லாம் பதைபதைக்கும். அது இன்னொரு வீட்டுக்கு வந்தது என்ற பின்பும் சோகம் மனதைப் பிழியும். சுற்றிவர எங்கள் காவல் தெய்வங்கள் நிற்கிறார்கள் எண்ட துணிச்சல்தான் எங்கள் நாளாந்த வாழ்வை நகர்த்திச் சென்றது.
ஒரு நாள். அப்பாவுக்கு நெஞ்சுக்குத்து. பட்டென்று போய்ச் சேர்ந்திட்டார். அம்மாவும் நானும் அனாதையா நின்றோம். அண்ணாவால அதுக்கும் வர முடியேல்ல. அண்ணான்ர கூட்டாளியள் எல்லாத்தையும் நின்று ஒப்பேற்றினர். முந்தியென்றால், ஊருக்குள்ள இது ஒரு பெரிய கதையாயிருக்கும். இப்ப, எல்லாருக்கும் விளங்குது. அண்ணாக்கு வரேலாமப் போச்சு என்று ஒரு ஆற்றாமை. அப்பா இல்லாத எங்கள் வீடு தாமதமாக என்றாலும் வழமைக்குத் திரும்பியது.
இப்ப என்ன?
“என்னம்மா…..?”
“என்னவோ தெரியேல்லை…..கொஞ்ச நாளா மனசு கிடந்து அடிக்குது…..ஏதோ..படபடவெண்டு வருது.”
ஒழுங்கையில சில பேர் கதைத்துக் கொண்டு போச்சினம். கையில பத்திரிகை.
“ என்னண்ணை புதுசா…..?”
“அடி விழுந்திட்டுதல்லே……!!! சிறப்புப் பத்திரிகை வந்திருக்கு. அடிபுடிபட்டு வாங்கி வாறம். ….இந்தா….பார்…..” ஒன்றை என்னிடம் நீட்டிவிட்டு நகர்ந்தினம்.
திரும்பி அம்மாவைப் பார்த்தேன். அவவின் இதயம் வாயில் துடிப்பது தெரிந்தது. இருவரும் எதுவும் பேசவில்லை. அதன்பிறகு அன்று முழுக்க நாங்கள் பச்சைத் தண்ணிகூட வாயில வைக்கேல்லை. ஏதோ ஒரு இனம் புரியாத நடுக்கம்.
மறுநாள். காலை பத்துமணி இருக்கும். மூன்று பேர் படலையடிக்கு வந்தினம். தெரியாத ஆக்கள். அப்பான்ரை பேரைச் சொல்லி வந்த இடம் சரிதானா என்று உறுதி செய்து கொண்டினம்.
“ ஓம்..தம்பி! …வாருங்கோ!”
அம்மா இப்ப முற்றும் துறந்த நிலையில் இருந்தா. நிதானமா உள்ளுக்கு கூப்பிட்டா. வந்தவை எதுவுமே பேசேல்லை. ஒரு பயமுறுத்தும் அமைதி. தலையைக் குனிந்துகொண்டு அஞ்சலிக்கு நிற்கிற மாதிரி நின்றினம்.
“சொல்லுங்கோ…” கடைசியா அம்மா வாய் திறந்தா.
“ அம்மா..!!….. நேற்று….” தளதளக்கும் குரலில் ஆரம்பித்தார் ஒரு அண்ணா.
அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் மடை திறந்து கொண்டது. சேலைத் தலைப்பை வாயில் வைத்து அமுக்கி கேவலை அடக்கிக் கொண்டாள். முதலில் எனக்கு எதுவும் விளங்கவில்லை. பிறகு….. நான் கூக்குரலிட்டு அழுவதற்கு முன், அம்மா என்னை இழுத்து மடியில் சாய்த்து என்னுடைய குரல் வெளியேறாது பார்த்துக்கொண்டாள்.
பக்கத்து வீட்டு சரசக்கா படலையைத் திறந்து விறுவிறுவென்று வருவது தெரிந்தது.
“ ஆரோ ஆக்கள் வந்தவையாம்..???”
இப்ப, ஆராவது புதுசா வீட்டை வருகினம் என்றால் எல்லாருக்கும் நெஞ்சிடிதான்.
அம்மா முகத்தை அவசரமாகத் துடைத்தாள். நானும் கையில் ஒரு புத்தகத்தை எடுத்து பாசாங்கு செய்தேன். அம்மா பாய்ந்து அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.
“ஓம் சரசு! தெரிஞ்சாக்கள் வந்திருக்கினம்…… தேத்தண்ணி போட்டிட்டு வாறன்….. அலுவலே?” அம்மா பிரயத்தனப்பட்டாள்.
சரசக்கா சுற்றிவரப் பார்த்து எல்லாம் இயல்பாயிருப்பதாக நம்பி வீடு திரும்பினாள்.
“படம் வைக்கேலா……என்ன?” கேவலுடன் அம்மா.
‘ஊரறியாமல் உறங்கும் உண்மை’. அம்மா புரிந்து கொண்டாள் என்ற நன்றியறிதலுடன் அவர்கள் புறப்பட்டனர்.
இவர்கள் வீடுகளுக்கும் யாரோ ஒருநாள் போவார்கள். வலித்தது.
“தம்பியவை……!! முடிஞ்ச நேரமெல்லாம் வாங்கோ..!”
என்றோ எடுத்து, நிறம் மாறிப் போயிருந்த புகைப்படத் தொகுப்பை அம்மா பெட்டியிலிருந்து எடுத்தாள். சிறுவனாக, அரைக் காற்சட்டையும் கையில் புத்தகமுமாக அண்ணா அதில் சிரித்துக் கொண்டிருந்தான்.