
‘மண்டோஸ்’ புயலால் 8 மாவட்டங்கள் பெரிதும் பாதிப்பு; மூவர் உயிரிழப்பு ; 4,335 பேர் பாதிப்பு;1,302 வீடுகள் சேதம்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவான ‘மண்டோஸ்’ புயலால் நாட்டில் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், மூவர் பலியாகியுள்ள அதேவேளை,மூவர் காயமடைந்துள்ளதுடன், 165 இற்கும் மேற்பட்ட உயிரினங்கள் பலியாகியுள்ளன.அத்துடன் பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக தங்குமிடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதேவேளை,கடலை அண்மித்து அமைந்துள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ள அதேவேளை,வீதிகளெங்கும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன்,வீட்டு கூரைகள் மீதும் மரங்கள் முறிந்து வீழ்ந்து பல வீடுகள் சேதமடைந்துள்ளன.அத்துடன் வீதியெங்கும் மின்சார கம்பங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன்,பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கிறது.
4,335 பேர் பாதிப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவான ‘மண்டோஸ்’ சூறாவளியால் நாட்டில் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 1,302 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,302 குடும்பங்களைச் சேர்ந்த 4,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதனால் ஊவா மாகாணம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 723 குடும்பங்களைச் சேர்ந்த 2,093 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேரும், அந்த மாகாணத்தில் 916 குடும்பங்களைச் சேர்ந்த 2,093 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில்…
யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளிக்கிழமை மதியம் வரையில் 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்தார்.
அத்துடன்,38 குடும்பங்களைச் சேர்ந்த142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 சிறுதொழில் முயற்சியாளர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.சண்டிலிப்பாயில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம், உடுவில் பகுதியில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலைய பெண்கள் விடுதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
அத்துடன், நல்லூர் ,பருத்தித்துறை , ஊர்காவற்துறை மற்றும் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது.
மன்னாரில்…
மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.மரங்கள் முறிந்துள்ளதுடன்,வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது.
சூறாவளி தாக்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் கடும் காற்று வீசியதுடன் கடுமையான குளிர் நிலை ஏற்பட்டதோடு மழையும் பெய்தது.இதனால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.
மேலும் மன்னார் தாழ்வுபாடு மீனவ கிராமத்தில் மீனவர்களின் மீன் வாடிகள் காற்றினால் சேதமடைந்துள்ளது.மேலும் படகுகள் மற்றும் மீன் வலைகளும் சேதமடைந்துள்ளது.
கிளிநொச்சியில்…
கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
மேலும் 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 42 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 21 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 20 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 01 குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 09 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 03 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.பாதிப்புக்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட இடர் முகமைத்துவ பிரிவு அவ்வந்த பிரதேச செயலகங்கள் ஊடக தகவல்களை திரட்டி வருகின்றது.
மூவர் பலி;மூவர் காயம்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மரங்கள் முறிவு மற்றும் கடும் காற்று காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை,மலையகத்தில் இருவர் மரணமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மாயமான தேவாலயம்…
புதுக்குடியிருப்பு பகுதியில் ஏ 35 வீதியில் அரை அடிக்கு மேல் நீர் பாய்கிறது.இதனால் அந்த வீதியை பயன்படுத்துவோர் அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் புதுக்குடியிருப்பு இரணைபாலையில் உள்ள குழந்தை இயேசு தேவாலயம் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் கூரை சேதமாகியுள்ளது.அத்துடன் தேவாலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பொங்கியெழுந்த பேரலை
கடல் சீற்றம் காரணமாக மூதூர் – தக்வாநகர் கடற்கரையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடற்கரையில் உள்ள மீன்வாடிகள் கடலரிப்பால் சேதமாகியுள்ளதோடு ,பயன்தரும் மரங்களும் சாய்ந்து வீழ்ந்துள்ளன. அத்தோடு கடற்கரையில் உள்ள கட்டடங்களும் வெடிப்புக்குள்ளாகியுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.
கடல் சீற்றத்தால் மூதூர் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துள்ளனர். இதனால் படகுகள் கரையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.
தீவக படகு சேவைகள் நிறுத்தம்
நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை 09 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக,வடக்கு மற்றும் கிழக்கு கரையோரத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் உயரமான அலைகள் எழ அதிக சாத்தியங்கள் காணப்படுகின்றது என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் (சுமார் 2.5 – 3.5 மீ) வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டு ,படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

