
வடக்கு, கிழக்கிலிருந்து தமிழர்களை விரட்டுவதை அரசு முன்னெடுக்கிறது; இராணுவத்தை அதற்காகவே இங்கு வைத்திருக்கிறது என்கிறார் விக்னேஸ்வரன்
தெற்கிலிருந்து தமிழ் மக்களை விரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பியது போன்று, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களையும் வெளிநாடுகளுக்கு விரட்டவும், இடம்பெயரச் செய்யவும் பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்துக்காக எந்தவொரு பொருளாதார மையங்களையும் அமைக்கப்போவதாக வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் குறிப்பிடவில்லை. திருகோணமலையில் ஒரு பொருளாதார மையத்தை அமைக்கப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். சிங்களவர்களை அங்கு கொண்டுவந்து அந்த மையத்தை அபிவிருத்தி செய்யப் போகின்றார்கள்.
539 பில்லியன் ரூபா 2023இல் பாதுகாப்புச் செலவினமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடித்து தங்கள் வசம் வைத்துக் கொண்டு சிவில் நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
539 பில்லியன் ரூபா ஒதுக்குவதற்குக் காரணம், தெற்கிலிருந்து தமிழ் மக்களை விரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பியது போன்று இராணுவத்தை இங்கு வைத்திருந்து வடக்கு கிழக்கில் வாழும் மக்களை அடக்கி வருங்காலத்திலே பொருளாதார காரணங்களுக்காக அவர்களையும் விரட்டும் ஒரு நிலையை ஏற்படுத்துவதேயாகும்’’.
ரணில் அரசு வீழ்வதற்கு நான் ஒரு காரணமாக இருக்கமாட்டேன்
8 ஆம் திகதி (இன்று) வரவு – செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பில் கஜேந்திரகுமாரின் கட்சி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்பேன். எப்படியும் பாதீட்டை எதிர்க்கமாட்டேன்.
இந்த அரசு வீழ்வதற்கு நான் ஒரு காரணமாக இருக்க மாட்டேன். ஏனெனில், இந்த அரசை விட்டால் அடுத்து வரும் அரசு இதனிலும் பார்க்கக் கேவலமான அரசாக இருக்கக்கூடும் என்று நான் எண்ணுகின்றேன்.
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் நாட்டின் நிலைமை இன்னும் சீர்கெடும். தற்போது இருக்கும் ரணிலைத் தொடர்ந்து இருக்கச் செய்து பொருளாதார ரீதியாக சில நன்மைகளைப் பெற்றுக்கொள்ள அவருடன் சேர்ந்து செல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கு இருக்கின்றது.
நாங்கள் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் சிங்கள அரசுகளிடமிருந்து எடுக்க முடியாது. அதற்காக அவர்களுக்கு எதிராக இருந்து கொண்டும் அவர்களிடம் இருந்து எதனையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று உண்மையாகவே நினைத்தால், ஒற்றையாட்சிக்குப் புறம்பான ஓர் ஆட்சி முறையை எவ்வாறு நாங்கள் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்பதை அவர்கள் (அரசு) முன்வைத்தால்தான் அவ்வாறான பேச்சுக்களுக்கு நாங்கள் செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

