
கோதாவை வைத்தியர்களே தவறாக வழிநடத்தியிருந்தனர்
ஜனாதிபதியாகவிருந்த கோத்தபாய ராஜபக்சவை ஒரு சில வைத்தியர்களே தவறாக வழிநடத்தினார்கள்.அவர்களின் பேச்சி கோத்தபாயராஜபக்ஸ கேட்காதிருந்திருந்தால் இன்றும் அவர்தான் ஜனாபதியென முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயத்துறை,கடற்றொழில் மற்றும் நீர்ப்பாசன துறை அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீடு குழு நிலைபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனை மீது தடை விதிக்கப்பட்டதால் நாட்டின் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்தது.என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றோம். இரசாயன உரம் இறக்குமதி மீண்டும் அமுல்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அரிசி உட்பட தேசிய உற்பத்தி உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன ஆனால் தற்போது பாரிய நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசி உட்பட தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்ய கூடிய அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சேதன பசளை திட்டம் தொடர்பில் ஒரு சில வைத்தியர்கள் ஜனாதிபதியாகவிருந்த கோத்தபாய ராஜபக்ஸவை தவறாக வழி நடத்தினார்கள்.இதனால் உரப் பற்றாக்குறையை தொடர்ந்து நாட்டில் பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றிணைந்த வகையில் தீவிரமடைந்தன.கோத்தபாய ராஜபக்ஸ தனது பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால் அவர் இன்றும் ஜனாதிபதியாக பதவியில் இருந்திருப்பார் என்றார்.

