
இன்னல்கள் இன்னமும் தீரவில்லை!!
21 நூற்றாண்டுகள் கடந்தும்
இன்னும் தீரவில்லை
இலங்கை நாட்டின்
இன்னல்கள்…!
எப்புறமும் ஏதோ ஒரு குறை
எம்மை எட்டிபார்க்கவே செய்கிறது…!
மலையகத்தில் மட்டுமேதான் குறைகள்
எம்மை குரல் கொண்டு அழைக்கிறது…!
இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில்…
இன்னும் மக்கள் இயல்பாய் ஏனோ
துயில் கொள்ளவில்லை…!
இயற்கை அனர்த்தங்களில்
உயிர்களை உடமைகளை
இழந்து தவிப்பதால் தானோ..?
கலைகள் எல்லாம் பிறப்பெடுத்த
மண்ணில்
மனிதம் இன்னும்
மகிழ்ச்சியில் இல்லை…!
படிப்புக்கு பாடசாலை
பக்கம் இல்லை..!
பாடுப்பட்டு பட்டம் பெற்றாலும்
பொருத்தமான வேலை இல்லை…!
கூலி வேலைக்கு உயிர்
கொடுத்தும்….
குடும்ப ஆசைகள் மெய்ப்பட வில்லை…!
பயணம் செய்ய
பாதைகள் இல்லை…!
இருக்கும் பாதைகளோ
எங்கள் ஊருக்குள் இல்லை…!
பட்டுதுணி, பஞ்சு மெத்தை
என்றுமே
எம் வசம் இல்லை…!
குடிக்கும் தண்ணீருக்கோ
குறை இன்னும் ஓய வில்லை..!
மின்சார ஒளியில்தான்
மலையகம்
மொத்தம் மிளிர்வதற்கு
வழியும் இல்லை…!
பசி பட்டினி மாறவில்லை!!
பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்
வறுமை இன்னும்
மறையவே இல்லை…!
லயங்களின் இடுக்கில்
மலையகம் இறுகி போய்
இன்னும் எழும்பவும் இல்லை…!
வெளிநாடுகளோ கழிவறைக்குக்கூட
தானியங்கி இயந்திரத்திற்கு
மாறியிருக்க….
மலையகமோ குடியிருப்பது கூட
இன்னும் குப்பை கூளங்களோடு….
மலையகத்தையும் சற்று
மார் தட்டி எழுப்பி
உயிரிப்பித்து உதவிடத்தான்
இறைவனின் உதவிக்கரங்கள்
இறங்கி வந்திடுமோ…?
இல்லை இரக்கம் இன்றி
இப்படியே உயிர்களை
எடுத்திடுமோ…?
உணர்வின்றி உணர்வுகளை
உள்ளே எரித்திடுமோ…??
-மாலினி மோகன்

