
இந்து சமுத்திர மேலாதிக்கம் யார் கையில்?
சீனாவின் நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கின்றன. இந்தியா தெரிவித்த விசனக் குரல்களையும் கண்டனங்களையும் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, அம்பாந்தோட்ட துறைமுகத்தில் தரிக்க ‘யுவான் வங் 5’ என்ற சீனக்கப்பலுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள். வாங்கிய கடனை மீளச் செலுத்தவியலாத நிலையில், அம்பாந்தோட்ட துறைமுகம் ஏற்கனவே 99 வருட கால குத்தகைக்குசீனாவிடம் கையளிக்கப்பட்ட விபரம் யாவரும் அறிந்ததே.
சீனாவின் பொறுப்பில் இருக்கும் ஒரு துறைமுகத்திற்கு சீனக்கப்பல் வருவதை ஏன் இந்த நாடுகள் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி எழும். ‘ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கான கப்பல்’ என்று சொல்லப்பட்டாலும் ‘யுவான் வங் 5’ ஒரு உளவுக் கப்பல் என்கிறது ராய்ட்டர்ஸ். இந்த செய்தி நிறுவனத்தின்படி, புதிய தலைமுறையைச் சேர்ந்த ஒரு விண்வெளி கண்காணிப்புக் கப்பல் இது.செயற்கைக் கோள்கள், ராக்கெட்டுகள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் என்பனவற்றை துல்லியமாகக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஒரு உளவுக் கப்பல். வெளியே ஆய்வு வேலைகளும் இரகசியமாக உளவு வேலையும் என்று இரு வேலைகளைச் செய்கிறது இது.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படை (PLA) யின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கப்பல் இருப்பதாக பென்ரகன் தெரிவித்துள்ளது. PLAவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சீன ஏவுகணைப் பிரிவு, விண்வெளிப் பிரிவு என்பனவற்றிற்கும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவக் கட்டமைப்புக்கும் கீழ் இது இயங்குவதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கிறது. அதே சமயம் கப்பலில் PLA கொமாண்டோக்களும் பொதுமக்களும் இணைந்து வேலை செய்வதாக ஏற்கெனவே வெளிவந்த சீன செய்தித் தகவல் ஒன்று தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்குசெல்லும் வழியிலும், அங்கு தரித்து நிற்கும் நேரத்திலும் இந்தியாவின் கேந்திர மையங்களை சீனக் கண்காணிப்பு அமைப்புகள் உளவு பார்க்கும் சாத்தியம் இருப்பதாக இந்திய NDTV செய்தி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அவர்களின் அச்சத்திலும் ஒரு நியாயம் இருக்கிறது. கப்பல் 750 கிலோமீற்றர் சுற்றளவை தனது ரேடார் வளையத்தினுள் வைத்துக் கண்காணிக்க வல்லது. தற்போது தரித்து நிற்கும் இடத்திலிருந்து பார்த்தால், கேரளாவின் அநேக கேந்திர மையங்கள், தமிழ்நாடு, ஆந்திராவின் முக்கிய நிலைகள் என்பன இந்த வளையத்தினுள் அடங்குகின்றன. எரிபொருளுக்காக ஆளையாள் அடித்துக் கொள்ளும், பட்டினியால் மக்கள் இறக்கும் ஒரு நாட்டில், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை நிரப்புவதற்காகவே கப்பல் தரித்து நிற்கிறது என்ற இலங்கை அரசின் அபத்தமான காரணம் நம்பக்கூடியதாகவா இருக்கிறது?
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை முழுதாக தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க, திட்டமிட்டு செயற்படும் சீனா, மேற்குலகிற்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு ஒரு தலைவலிதான். ஐரோப்பிய – ஆசிய மிகமுக்கிய வழித்தடத்தை கண்காணிக்கவே கப்பல் இலங்கை வந்துள்ளது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ஏற்கனவே, சீன – தைவான் பிரச்சனையில், சீனக் கட்டுப்பாட்டின் கீழ் தைவான் மீண்டும் முழுதாக வந்தால், குவாம் மற்றும் ஹவாயிலுள்ள தனது இராணுவத் தளங்களுக்கு ஆபத்து என்று அச்சப்படுகிறது அமெரிக்கா.
அது மட்டுமல்லாமல், உலகம் முழுவதற்குமானகணணிகள், கைபேசிகள், கடிகாரங்கள், ‘கேம் கொன்சோல்கள்’ போன்ற எல்லா டிஜிற்றல் கருவிகளுக்குமான 65% ஆன ‘சிப்’ இனைத் தயாரித்து விற்பது தைவான்தான். உலகச் சந்தையின் பாதியை தைவான் தன் வசம் வைத்திருக்கிறது. 2021 இல் மட்டும் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தைவான் ‘சிப்’ வர்த்தகம் இருந்திருக்கிறது. தைவான் சீனாவிடம் போய்விட்டால் கிட்டத்தட்ட டிஜிற்றல் மயப்பட்டிருக்கும் முழு உலகும் சீனாவை நம்பியிருக்க வேண்டி வரும். இது மேற்குலகிற்கு ஒரு பெரிய பிரச்சனை. அவை சீனாவை உன்னிப்பாக அவதானிக்கின்றன. அண்மையில் சீன எதிர்ப்பையும் மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் போயிருந்தார். சீனாவிற்கு எதிராக தைவானுக்கு அமெரிக்கா ஆயுத தளபாடங்களை வழங்கி உதவுவதன் பின்னணியும் இதுதான்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் வல்லரசு நிலையில் இருக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலாக சீனா இருப்பதாக இந்தியா கருதுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைக் காக்க டெல்லி எந்த எல்லை வரையும் போகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு கடந்த மாதம் தெரிவித்திருந்தது ஞாபகமிருக்கும். பல ஆண்டுகளாக,இந்தியப் பெருங்கடலின் வணிகக் கப்பற் பாதையை இந்தியா, இலங்கை இரண்டுமே இணைந்து கண்காணித்து வந்தன. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர நிலையில் அமைந்திருக்கும் இலங்கை கடந்த இரு தசாப்தங்களாகத்தான் சீனாவுடன் சற்று நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. அண்டை நாடான இந்தியாவிற்கு இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தபோதும், இலங்கை விவகாரங்களில் இருந்து இந்தியாவால் தள்ளி நிற்க முடியாது. இரு நாடுகளும் தன்னிடமிருந்து விலகிப் போகாமலும் முரண்படாமலும் ஒரு வழுவலான உறவைஇந்தியாவுடனும் சீனாவுடனும் பேணி வந்திருக்கிறது இலங்கை.

ஆனாலும், சமீபகாலமாக, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தபோதும் இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் உதவ முன்வரவில்லை. எரிபொருள், சமையல்வாயு, மருந்துகள் என்று வாங்குவதற்காக கோடிக்கணக்கில் கடனுதவியும் பொருளுதவியும் செய்தது இந்தியா.அன்பளிப்பாக பொருட்களையும் அனுப்பி வைத்தது. சீனக் கப்பல் வருவதற்கு ஓரிரு நாட்களின் முன்புதான் கடற் கண்காணிப்பிற்கென ஒரு டோனியர் 228 ரக விமானத்தையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது. ‘இந்திய இலங்கை கடல்களைக் கண்காணிக்கும் இரு நாடுகளின் கூட்டு முயற்சியின் ஆரம்பம்’ என்று அந்தக் கையளிப்பு விழாவில் பெருமைபடப் பேசியிருந்தார் ரணில். உடனேயே சீன உளவுக் கப்பலுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதானது இந்தியாவுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை மீண்டும் தனது முதுகிற் குத்திவிட்டதாகக் கருதுகிறது இந்தியா.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராசதந்திர ரீதியாக நுழைய எடுக்கும் சீன முயற்சி இதுதான் முதற் தடவையல்ல. 2014 இல் ராஜபக்சேக்கள் ஆட்சியில் இருந்தபோது, இரு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்து சர்ச்சையைக் கிளப்பின. பின்னர், 2017 இல் மீண்டும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அப்போது இதே ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்தார். ஆனால், இந்தத் தடவைஅனுமதி கொடுத்ததும் அதே ரணில்தான்.
அண்மையில் நடந்த பதவிப் போட்டியின்போது, இந்தியா சஜித் பிரேமதாசவின் பக்கம் நின்றது. இதை மனதில் வைத்து, ரணில் தனது குள்ளநரி வேலையினூடாக இந்தியாவிற்கு பயம் காட்டியதாகவும் இச்சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாமோ? இலங்கை தன்னுடைய தனிப்பட்ட முடிவுகளை எடுக்கக்கூடிய சுதந்திர நாடாக இருந்தபோதும், உளவுக் கப்பலை அனுமதித்ததானது இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல்தான் என்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். புலனாய்வு அறிக்கைகளின்படி, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளுக்காக சீனா மூன்று இடங்களைத் தேர்வு செய்திருக்கிறது. அம்பாந்தோட்ட துறைமுகம், கம்போடிய துறைமுகம், மியான்மார் சிட்வே துறைமுகம் என்பனவே அவை. கப்பலில் வருகையுடன் புலனாய்வுத் தகவலையும் ஒப்பிட்டு இந்தியா ஐயுறுவது இயற்கையே.
நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைந்த புதிய அரசாங்கம் இந்தியாவையும் சீனாவையும் எப்படிக் கையாளப்போகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த முக்கோண நெருக்கடியில் இலங்கை யார் பக்கம் சரியும் என்ற அரசியல் ஆரூடங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. வருங்காலத்தில் இந்திய – இலங்கை உறவில் விரிசல் விழுந்து விடுமா என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை. இந்தியா கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு வழங்கியபோது சீனா அதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. தனது காரியமே கண்ணாக,இலங்கையில் தனது கால்களை ஊன்றுவதில் சீனா கவனமாக இருக்கிறது. கடன் பிடியில் சீனா இலங்கையை வைத்திருப்பது போல, இந்தியாவிற்கும் மேற்குலகிற்கும் இலங்கையில் இருக்கும் பிடி ஈழத்தமிழர் விவகாரம்தான். இலங்கை தமது பிடியிலிருந்து விலகுவது தெரிந்தவுடன் இந்தியாவும் மேற்குலகும்தமிழர் பிரச்சனையைக் கையிலெடுக்கும்.
இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது. இந்தியாவும் மேற்கு நாடுகளும் இலங்கை முழுதாக சீனா பக்கம் போய்விடாமல் இருக்க தமிழர் பிரச்சனை, தீர்வு என்ற ஆப்பைக் கையிலெடுத்து இலங்கையை அடக்கி வைக்கப் போகின்றன. சீனா, துறைமுக நகர், அம்பாந்தோட்ட துறைமுகம், பட்டுப் பாதைத் திட்டம்,நாட்டின் புனர் நிர்மாணம் என்று கடன்களை வாரி வழங்கி இலங்கையை கடன் சுமையில் தள்ளுகிறது. இலங்கைக்கு கடற்படைக் கலம் ஒன்றையும் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளது. அரச, தனியார் துறைகளில் பாரிய முதலீடுகள் செய்துள்ளது. யாழ் தீபகற்பத்தில் மூன்று தீவுகளை வாங்கும் சீனாவின் முயற்சி இந்தியாவின் கடும் எதிர்ப்பினால் கைவிடப் பட்டாலும், அம்பாந்தோட்ட துறைமுகத்திற்கு மேலும் 974 மில்லியன் கடன் கொடுத்துள்ளது சீனா.இலங்கையின் துறைமுக சபைக்கு மட்டும் 700 அமெரிக்க டாலர் நிதியுதவி செய்துள்ளது.
இந்தியாவும் தன் தலையீட்டை விட்டுக் கொடுப்பதாக இல்லை.இலங்கையின் அரச, தனியார் துறைகளில் பாரிய முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதுப்பிக்கப்படும் ஆற்றல், துறைமுகம், உட்கட்டுமானம், தொழில்நுட்பம், ஹைட்ரோகாபண் திட்டங்களில் கையெழுத்திட ஆலோசனை செய்கிறது. காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்காக 400 பில்லியன் நிதியுதவி கொடுக்கவும்இந்தியா முடிவு செய்துள்ளது. மன்னாரில் காற்றாலைகள்அமைக்கும் திட்டத்தையும் கருத்தில் கொண்டுள்ளது.
‘எல்லோருடனும் ஒத்துப்போகும் மனப்பாங்குள்ளவர்’ என்ற காரணத்தினால் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டி இம்முறை தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளவும் கூடும். இங்கு தனித்து விடப்பட்டிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான். உண்மையில் யாருக்கும் தமிழர் பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுத் தரும் அக்கறையில்லை. அதற்கான முகாந்தரமும் இல்லை. பிரச்சனைகளின் போது தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக மட்டுமே இருந்துவிடாமல் தகுந்த முடிவெடுத்து தீர்வு காணவேண்டிய பொறுப்பு தமிழர்களிடம் மட்டுமே உள்ளது.
-பாரி

