தொழிலாளியும், கம்பனியும் ஒரே பார்வையில்

தொழிலாளியும், கம்பனியும் ஒரே பார்வையில்

புனித பிரியா (நுவரெலியா)

இலங்கையில் தேயிலை உற்பத்தி என்பது வெளிநாட்டுவருமானத்தைப் பெற்றுத் தரக்கூடிய பிரதான வளமாகக் காணப்படுகின்றது. இது தேசிய வருமானத்திலும் முக்கிய பங்களிப்பு வகிக்கின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக இருந்து 2013ம் ஆண்டு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்தேழு மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்று கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கோப்பி பெருந்தோட்டங்கள் ஏமியா வஸ்டரிக்ஸ் என்ற நுண்மத்தாக்குதலுக்குள்ளாகி அழிவடைந்தது. அதன் பின்னர் கோப்பி பெருந்தோட்ட அதிகாரிகள் வேறு ஒரு பயிருக்கான தேவையை உணர்ந்தமையினால் தேயிலை பயிர் அறிமுகப்படுத்தப்பட்டது. லூல்கந்துரை எனும் இடம் தேயிலை வளர்ப்பிற்கு பொருத்தமான இடமாகக் கருத்தப்பட்டது. குறித்த பகுதியில் ஜேம்ஸ் ரெய்லர் என்பவரால் 1867ம் ஆண்டு 19 ஏக்கர் நிலத்தில் தேயிலை பயிரிடப்பட்டது. ஏற்கனவே வட இந்திய பகுதியில் தேயிலை உற்பத்தியில் அனுபவம் பெற்றிருந்த ரெய்லர் தேயிலை இலையை சுருட்டி, வாடிய தேயிலைகளை களிமண் அடுப்பில் கரியை பயன்படுத்தி சுட்டு பல சோதனைகளை மேற்கொண்டார். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தேயிலை இலண்டன் நகர ஏலத்தில் விலையேறப் பெற்றமையின் காரணமாக இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு ஊக்கமளித்தது.

1873 – 1880 வரை உற்பத்தி செய்யப்பட்ட 12 கிலோ தேயிலை உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 1890ம் ஆண்டு இலங்கை 22 ஆயிரத்து 900 டொன் தேயிலை உற்பத்தியில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தியது. 1971ம் ஆண்டு வரை பெரும்பாலான பெருந்தோட்டங்கள் பிரித்தானியரின் கைவசம் காணப்பட்டன. இவை நில மறுசீரமைப்பு சட்டத்தின்படி அரசாங்க வசப்பட்டன.

1992ம் ஆண்டு தேயிலை பெருந்தோட்டங்களின் நிர்வாகம் 22 தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆரம்பத்தில் பெருந்தோட்டங்கள் தனியார் நிறுவனங்களிடம் வழங்கப்பட்ட போது கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்படவில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதி சட்டங்கள் மற்றும் பொதுவான தொழிற்சட்டங்களை அடிப்படையாக கொண்டு அவை நிர்வகிக்கப்பட்டன. இதன் காரணமாக சம்பளம் சம்பள நிர்ணய சபையின் ஊடாக தீர்மானிக்கப்பட்டன. 1994ம் ஆண்டின் பின்னர் அரசாங்கம் சம்பள நிர்ணய விடயத்திலிருந்து விலகி கொண்ட பின்னர் பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களை கொண்டு கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க ஆரம்பித்தன.

ஆரம்பத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் மாத்திரம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதுடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியனவும் தொழிற்சங்க பிரதிநிதிகளாக கைச்சாத்திட்டன. இதுவே 1996ம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்தம் எனும் பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் 1998ம் ஆண்டு முதலாவது கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது தொழிலாளர்களின் நலன் குறித்து அமைந்ததுடன், மலையக மக்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கும் அம்சமாகவும் மாறியது. கிட்டத்தட்ட பன்னிரண்டு வரையிலான கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

கூட்டு ஒப்பந்தம் 20 வருடங்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தம் இருந்த போதும் சரி இல்லாத போதும் சரி முறையாக அதிகரிக்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு உயரும் அளவிற்கு தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளம் கிடைப்பதில்லை. அவர்களது வாழ்வாதாரத்தை சமாளிக்க முடியாமையின் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் விவசாயம் உள்ளிட்ட பகுதி நேர தொழில்களை செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் தோட்டப் புறங்களை விட்டு வெளியேறி நகர்புறங்களில் தொழில்வாய்ப்புக்களைச் செய்து வருகின்றனர். வளரும் தலைமுறையினர் கல்வி உதவியுடனோ, ஏதாவது ஒரு வகையில் பெருந்தோட்ட தொழிலில் இருந்து விடுதலையாகி நிரந்தர வருமானத்தை பெற்று கொள்ளும் வாழ்க்கை முறையை தேடி செல்கின்றனர். குறித்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது முழுமையாக இரத்து செய்யப்பட்டு இலங்கையில் ஏனைய தொழிலாளர்கள் அனுபவிக்கும் சம்பள உரிமைகளுடனான மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதே கடந்த காலங்களில் இந்த தொழிலாளர்களின் கோரிக்கையாக காணப்பட்டது. கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்த பின்னர் இன்னும் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டுள்ளது.

ஆனால் இவர்களின் உள உணர்வுகளை புரிந்து கொள்ளாத சில இலாப நோக்கமுடைய சின்னத்தனமான அரசியல்வாதிகள் அவர்களை போராட்டங்களை நடத்துமாறு கோரி அவர்களின் வாழ்வாதாராத்தை மேலும் கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர். இதை புரிந்து கொள்ள முடியாத நம் இனம் அவர்களின் ஆட்டுவித்தல்களுக்கு ஆடுகின்றன. 200 வருடங்களாக கூலி தொழிலாளிகளாக வாழ்ந்து வரும் நம் மலையக சமுதாயம் மாற வேண்டும். அரசியல்வாதிகள் இவர்களின் வறுமையை வைத்து தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். யாரும் இவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதில்லை என்பதை இவர்கள் தாமதமாகவே புரிந்து கொள்கின்றனர்.

உலக சந்தையில் தற்போது இலங்கையின் தேயிலை விற்பனை ஒரு ஸ்தீரமான நிலையில் இல்லை. இதனால் தொழிலாளர்களுக்கு நாளொன்றிற்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தரமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக குறித்த கம்பனிகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே அவர்களின் நிலை கருதியும் நாம் செயற்பட வேண்டும். உதாரணமாக ஒரு குடும்பத்தின் வருமானம் 5 ஆயிரம் ரூபாவாக காணப்படும் எனில் அந்த வருமானத்திற்குள்ளாகவே அந்த மாதம் முழுவதும் வாழுவமே தவிர நமது அத்தியவசிய தேவைகளைவிடுத்து ஆடம்பரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளமாட்டோம் தானே? அது போல இலங்கையின் தேயிலை உலக சந்தையில் மீண்டும் ஒரு நல்ல விலைக்கு விற்பனையாகும் வரையில் நாம் அந்த தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிக்கு எவ்வாறு உந்து கோலாக செயற்பட வேண்டும் என எண்ண வேண்டுமே ஒழிய கம்பனிகளுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நாம் நமக்கான தேவைகளை கம்பனியிடம் நேராக எப்பொழுது கேட்க முனைகின்றோமோ அன்றுதான் நம் சமூகம் முன்னேறும். அதுவரை அரசியல்வாதிகள் இந்தியாவில் மாத்திரம் அல்ல உலக நாடுகளிலும் வீடு காணிகளை கொள்வனவு செய்து சுகபோகமாக வாழ்ந்து வருவார்கள். நாம் கம்பனியின் போக்கில் செல்வோமாயின் நமது நிலை அறிந்து கம்பனி நிர்வாகம் நமக்காக நாம் கோராமலே சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும். நாம் வெட்கப்படும் இடத்தில் உயர்த்தப்படுவோம் என வேதங்கள் கூட சுட்டிக்காட்டுகின்றன. எனவே நாம் கொஞ்சம் பணிந்து செல்வதினால் நமக்கு எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை என்பது எனது கருத்து.

மேலும், இன்றைய கால கட்டத்தில் காணப்படும் பொருளாதார விலையேற்றம் காரணமாக மலையகத்தில் வட்டிக்கு பணம் கொடுத்தல், நுண் நிதி நிறுவனங்கள் ஆகியன அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாகவும் மக்கள் வெளியிடங்களுக்கு தொழில் தேடி செல்கின்றனர். மக்கள் தாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை வட்டியாக செலுத்துகின்றோம் என்பதை உணரும் வரையில் அவர்களுக்கு மாதம் இலட்சத்திற்கு மேல் உழைத்தாலும் அந்த பணம் போதுமாக இருக்காது என்பதே உண்மையாகும். தமது வருமானத்திற்கேற்ப செலவு செய்தால் மக்களின் மாத தேவைகள் குறிப்பிட்ட சம்பளத்திலேயே மட்டுப்படுத்தப்பட்டு விடுவதுடன் மீதம் வைக்க கூடிய நிலையும் ஏற்படும். மேலும் நகர்புறங்களில் வாழும் மக்கள் நீர், தங்குமிடம் உட்பட அனைத்திற்கும் பணம் செலவிட வேண்டும். ஆனாலும் தோட்ட புற மக்களுக்கு நீர், தங்குமிடம் இலவசம், அவர்களின் வீட்டு சுற்று புறங்களில் தமக்கு விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்பு போன்ற சிறு சிறு தொழில்களில் ஈடுபடவும் முடியும். உதாரணத்திற்கு சில மலையக தொழிலாளர்கள் வீட்டில் குறைந்தது ஏதாவது ஒரு வாகனமாவது காணப்படுகின்றது. இவர்களும் இந்த தோட்டத்தில் வேலை செய்து மீதம் வைத்து தான் இவ்வாறான நாகரீக உலகத்திற்கு வந்துள்ளனர். எனவே அனைவரும் உள்ளதை கொண்டு வாழ பழகி கொண்டால் அவர்களுக்கு மேலதிக தேவைகள் ஏற்படாது.
அது மாத்திரமல்ல, தோட்ட தொழிலாளிகள் தமக்கு சம்பளம் போதாது என வெளியிடங்களுக்கு சென்று விட்டால் அந்த தோட்டங்களை கம்பனி எவ்வாறு நடத்தும். குறித்த பணிகளை மேற்கொள்வதற்கு தொழிலாளர்கள் இல்லாமல் தோட்டங்களை எப்படி பராமரிக்க முடியும். எனவே இரு நபர்களின் பணிகளை ஒருவர் மேற்கொள்ளும் தேவை இங்கு எழுகின்றது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். முழுக்க முழுக்க தவறை நம்மீது வைத்து கொண்டு கம்பனி நிர்வாகத்தை குற்றம் சுமத்துவதில் எவ்வித பயனும் இல்லை. நமது பணியை நாம் சரியாக செய்து விட்டு தோட்ட நிர்வாகம் நமக்கு சம்பளம் அதிகரிக்கவில்லை என போராட்டங்களை மேற்கொண்டால் தவறில்லை. நமது பணி ஆங்கு அவ்வாறே கிடக்க நாம் வீணாக சம்பள உயர்வை மாத்திரம் பேசுவதில் பயனில்லை. ஒரு அரசியல்வாதி ஒரு விடயத்தை உள்ளடக்கி போராட்டம் நடத்தினால் அவரது எதிர் அரசியல்வாதி வேறொரு விடயத்திற்காக போராட்டம் நடத்தத்தான் செய்வார் இது அரசியல் சூட்சுமம். இதை நாம் நன்கு கருத்திற்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் நம் வாழ்வை நிர்ணயிக்க விட்டு விடக் கூடாது. நம் வாழ்க்கை நம் கையில் எனவே தோட்ட தொழிலாளர்கள் நாம் வாழும் தோட்டப் புறங்களை முதலாவதாக நேசித்து அந்த நிர்வாகங்கள் மகிழும்படி நம் உற்பத்திகளை மேம்படுத்தி காட்ட வேண்டும். பின்னர் அவர்கள் தாமாகவே முன்வந்து நமக்கான சம்பள உயர்வை பெற்றுத் தருவார்கள். உதாரணமாக குறிப்பிட்டால் தலவாக்கலை தோட்டத்தில் நாளொன்றிற்கு அந்த நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குகின்றது. அங்குள்ள தொழிலாளர்களும் நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றர். நிர்வாகம் தொழிலாளர்கள் மத்தியில் நல்ல சுமுகமான நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலை ஏனைய தோட்ட பகுதிகளுக்கும் வரவேண்டும். அப்போது இந்த கூட்டு ஒப்பந்தமோ அரசியல் தலையீடுகளோ தேவையில்லை. தொழிலாளர்கள் பக்கம் வெற்றி கிட்டும்.

மேலும் தோட்ட நிர்வாகம் தனக்கு கிடைக்கும் இலாபத்தை அடிப்படையாக கொண்டு தமது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்கி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் தோட்ட புறங்களும் செழிப்பாகும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் செழிப்பாகும். சம்பள போராட்டம் ஆரம்பிக்கும் போதெல்லாம் குறித்த தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்குவதைவிட தொழிலாளர்களை அழைத்து அவர்களது பிரச்சினைகளுக்கு செவிகொடுக்கும் பட்சத்தில் பிரச்சினைகள் ஏற்படாது. எந்தவொரு விடயத்திலும் தரகர் மூலம் தீர்வு காண முற்பட்டால் இதுமாதிரியான பிரச்சினைகள்தான் எழும். அரசியல்வாதிகளுக்கு செலவு செய்யும் பணத்தை வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளர்களுக்கு வழங்குவதினால் நிர்வாகத்திற்கு குறைவேதும் ஏற்படப்போவதில்லை. இந்த சம்பள பிரச்சினை என்பது தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இணைந்து கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும். வீணாக கூட்டு ஒப்பந்தமும் தேவையில்லை, அரசியல்வாதிகளின் நடுநிலைமையும் தேவையில்லை. வீணாக முரண்பட்டு கொள்வதிலும் போராட்டங்களை நடத்துவதிலும் ஏற்பட்ட பலன் என்ன? நிலுவை சம்பளம் ஏற்பட்டது தான் மிகுதி.

எனவே தற்காலத்தில் வசிக்கும் நாம் எதையும் ஆராயாமல் வீணே யாரோ ஒருவரின் கருத்துக்களை கொண்டு நமது தீர்மானங்களை முன்னெடுப்பதைவிட, நன்றாக சிந்தித்து செயற்படுவது சிறந்தது என்பதே நான் இந்த கட்டுரையை எழுதுவதன் நோக்கமாகும். மழையிலும் வெயிலிலும் கஷ்டப்படுவது நாம். ஆனால் நமது நெருப்பில் குளிர் காய்வது எங்கோ இருந்து வந்த மரபு வழி அரசியல்வாதிகளும், நவீன அரசியல்வாதிகளும் தான் எனவே அரசியல்வாதிகளை புறக்கணித்து நாம் அகிம்சை ரீதியான அறவழி போராட்டங்களை நடத்துவோம். வெற்றி நிச்சயம். வாழ்க மலையகம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )