
தேசத்தின் தூண்கள்!!
எரிபொருளுக்காக
ஏங்கி நிற்கும் வரிசையில்
மரணம்…!!
அதே வரிசையிலேயே
பல ஜனனம்….!!
வீதியெங்கும் மக்கள் வெள்ளம்..
ஆர்ப்பாட்டங்கள்… அழுகைகள்..
விண்ணப்பங்கள்… விசனங்கள்…
எல்லாமே..
உயிரைத் தக்கவைக்க
இன்று
நடக்கும் போராட்டங்கள்..
நெஞ்சம் கனக்கிறது…!!
கண்மணிகளே…!!
உயிர் வாழத் துடிக்கும்
மாந்தர் மத்தியில்
காலம் குறித்துக்
கையசைத்துப் போனீர்கள்…!!
வாழும் வயதில்
காற்றிடை கலந்தீர்கள்…!!
நீங்கள் இல்லாமலே
அடுத்த பொழுது விடியும்..
தெரிந்தும்… புன்னகை மாறாமல்
போய்வருகிறோம் என்றீர்கள்…
நாளாந்த வழக்கம் போல
நாளை செய்ய வேண்டியதையும்
சொல்லிச் சென்றீர்கள்….!!
பொதியுடன் போனவர்கள் பற்றிய
செய்தி மட்டுமே திரும்பி வந்தது!!
உண்மை எதுவெனத் தெரிந்தும்
இன்று வருவீர்…
நாளை வருவீர்…
என்றாவது ஒருநாள்
எம்முன்னே வருவீர் என
காத்திருக்கிறோம்..
கண்மணிகளே…!!
காத்துக் கொண்டே இருக்கிறோம்.. இருப்போம்!
கந்தக வாடை நடுவில்
இன்னமும்
உங்கள் சுகந்த வாசம் வீசுகிறது…..
புன்னகைக்கும்
குழந்தைகள் முகங்களில்
உங்கள் ஜாடை தெரிகிறது.
மீண்டும் பிறப்பீர்..
மீள் பிறப்பெடுப்பீர்..!!
உங்கள் வீரம்…!!
தன்னை எண்ணாது
தாயவளைக் காக்கும்
தற்துணிவு…!!
தலைமையை தாங்கிநிற்கும்
தீரம்..!!
நிதானம்…!
தளம்பாத உறுதி…!!
எங்களுக்கு என்றும் வேண்டும்.
தேசத்தின் தூண்களே….!!
உங்கள் அர்ப்பணிப்பு..
மாதத்தில்…
வரலாற்றில் நிகழாத
மக்கள் புரட்சி!!
உங்கள்
ஈகைக்கு அர்த்தம் உள்ளது…!!
கண்மணிகளே….!!
சத்தியம் தோற்றுப் போனதில்லை!!
காலம் கடந்தாலும்
வாய்மையே வெல்லும்..!!
-கனலி