
இதுவும் ஒரு கோடை விடிகாலை
சிட்டுக் குருவிகளின்
சின்னச் சின்ன
சீண்டல்கள்
இங்கில்லை!
காகம் கரையும்
காலையுமில்லை!
கதிரவன் என்னை
எழுப்பவுமில்லை!
வண்ணத்துப் பூச்சிகளின்
வர்ணங்களையும் காணோம்!
சேவல் கூவலும்
சில் வண்டுகளின்
ரீங்காரமும்
வாடைக் காற்றும்
பாண் வண்டிகளின்
பரபரப்பும் ..
வாசல் வரவில்லை!!
அதிகாலை மனம்
வருடும்
பிள்ளையார் கோவிலின்
விடாத மணி ஒலியும்
அக்கம் பக்கம் -வீட்டாரின்
முணு முணுப்புகளும்
இடஞ்சல் தரவில்லை..!
படுக்கை அறைவரை
பரவி கிடக்கும்
அம்மா வின் தேநீர்
வாசமும்
வெள்ளைச்சியின்
சாணி நாற்றமும்
முல்லை விரிதலும்
மல்லிகை சிரிப்பதும்
எதுவுமேயில்லாமல்…
ஒற்றை
அலாரம் ஒலியுடன்
விடியும் இந்த
காலைக்கு பழக்கப்படுவது
அவ்வளவு
இலகுவானதேயில்லை …
காற்று முத்தமிட
மறந்த மரங்களும்
சல சலக்க
தயங்கும்
நீரோடைகளும்
மணம் தரா
மலர்களும்
இங்கும் தான்…
இலத்திரன்
கம்பிகளில்
தொங்கி கொண்டே
இடை விடாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
வண்டிகளைப்
போலவே இந்த
மனிதர்களின்
விடிகாலையும்..!!
வழித்.(வாழ்க்கை)
துணைக்கு
வளர்ப்பு நாயுடன்
வலம் வரும்
அனாதை
மனிதர்களின்
ஏக்கம் நிறைந்த
விழிகளில்
தினம் தினம்
விடியும் இந்த நாட்கள்
ஏனோ
வாழ்வின்
பிடிமானங்களை
தொலைத்து
அலைக்கழிக்கின்றது …!!
தூரத்தில் தெரியும்
அவர்களின்
மெல்லிய புன்னகை
பிடிக்காத இந்த
விடியலையும்
கனதியாக்கி போகிறது….!!
எழுந்து நடக்கின்றேன்…
பிடிக்காத இந்த விடியலிலும்
பிடித்தமானவர்களிற்காய்…!
-மிதயா கானவி