ஆவி உலகிலிருந்து வேண்டுகிறேன்!!

ஆவி உலகிலிருந்து வேண்டுகிறேன்!!

பரமண்டலத்தில் இருக்கும்
எங்கள் பிதாவே…!!
ஸ்தோத்திரம் தேவனே!
நவாலியில்…
‘புக்காரா’ குண்டில் பரலோகம் போன
அப்பாவி ஆத்மாக்களில்
நானும் ஒருத்தி… இன்னமும்
ஆவியாய் அலைகிறேன்!

கர்த்தரே!!
கண்டதையும் கேட்க
நானிங்கு வரவில்லை…
புதிதாக
உம்மிடம் கேட்க
எனக்கென்ன இருக்கிறது…?

1995 ஜூலை ஒன்பது
ஞாபகத்தில் வருகிறதா…?
சென் பீட்டர்ஸ் தேவாலயம்…!!!
புக்காரா குண்டடித்து
கொத்தாகக் கொன்றார்களே..!
அகதியாய் உம்மையும்
அலைய விட்ட அந்த நாள்….
மௌன சாட்சியமாய்
அனைத்தையும் பார்த்திருந்த
சிலுவை ஆண்டவரே….!!
உம் முன்னால்
கிழங்குகளாய்….
அடுக்கப்பட்டிருந்த
உடலங்களின் உரிமையாளர் – அந்த
147 பிரேத ஆத்மாக்கள்
சாட்சியமாய்க் கேட்கிறேன்…..
நவாலிப் படுகொலைகளுக்கு
நீதி வேண்டும்…!!! கிடைக்குமா..எங்கள் தேவா..?

இருபத்தெட்டு வருடங்களாய்
அந்தரித்துக் கிடக்கிறேன்..
ஆண்டவரே..!!
பரலோக ராஜ்யத்திற்கு
அழைத்துச் செல்வீரென
பிறந்ததில் இருந்தே
திடமாய் நம்பினேன்…
தேவாலயம்தான் எனக்கு
எல்லாமுமாக இருந்தது.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்
பிதாவே..!!
நீர் கூறியது போல
பாவிகளையும் நான் மன்னித்து
வாழ்ந்தேன்…
எம்மை
துன்புறுத்தியவர்களுக்காகவும் சேர்த்து
நான் மன்றாடினேன்…
அடக்குமுறைகளை எதிர்த்ததால் – நீர்
சிலுவை சுமந்தீர்…
எதுவுமே செய்யாத எமக்கு
ஏனிந்தத் தண்டனை…??

பாதுகாப்பிடத்திற்கு நகருங்கள் – என்ற
கட்டளை கேட்டு
உம்மைத்தானே விசுவாசமாய்த்
தேடிவந்தோம்….??
உங்கள் தலையிலேயே குண்டு போட
எப்படி நீர் அனுமதித்தீர்…??
வயோதிபர்… வாலிபர்.. குழந்தைகள்
அத்தனை பேரும்
உம் முன்னால் மண்டியிட்ட
மானிடர்தானே..!
அன்று…
கண்முன்னே என் குழந்தை
காணாமல் போனதனை
கண்டும் செயலிழந்து கிடந்த
பாவி நான்..!!

வாழ்க்கை என்றால் என்னவென்று
தெரிவதற்கு முன்னாலே
சிதறுண்டு போன
இந்த மானிடர்
கூட்டம்
செய்த பாவம்தான் என்ன….?
கொலைவெறியாடிய பாதகர்க்கு
தண்டனை எதுவும் கிடையாதா?
எங்களுக்கு நியாயம் கிடைக்க
வழி செய்ய மாட்டீரா….?

இந்தப் பாவிகளின்
நிறைவேறா ஆசையைத் தீர்த்துவைத்து
பாவிகள் எங்களை இரட்சிக்கக் கூடாதா?

ஆவியுலகிலும் எங்களுக்கிங்கு
நிம்மதி ஏதும் கிடைத்தபாடில்லை…
சுடு காடாய்ப்போன
எங்கள் தேசத்தின்
இடுகாட்டு நிலத்தையும்– திருட
அரசமரக் கன்றுடன்
காத்துக் கிடக்கிறது இந்த
இனவெறிக் கூட்டம்.
அமைதியின்றி அலைகிறோம்…
பிதாவே….!!
எப்போது எங்களுக்கு பாவ விமோசனம்?
தவறுதலாய் இடம்பெற்ற
குண்டுவீச்சு – என்று
சர்வசாதாரணமாய்
‘சந்திரிகா’ விடும் அறிக்கை
போன உயிர்களைக்
கொண்டுவந்து சேர்த்திடுமா..??
இன்றும் பரிதவிக்கும்
உற்றார் உறவினரின்
அவலத்தைத் துடைத்திடுமா…..??

உம்மையே
இடம் பெயரவைத்த
கொலைகாரப் பாவிகளை
ஒருமுறையாவது
தண்டியும்.. கண்டியும்….
உமது மகிமையை
எமக்குத் தாரும்…!
இறப்பிலாவது எமக்கு
சந்தோசம் தாரும்…!
ஆண்டவரே! – இந்த
ஆவிகளை இரட்சியும்…..!!

-கார்த்திகை

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )