
திலீபனுக்கு நினைவிடமா?; நிராகரித்த யாழ்.மேயர்; பிரேரணையை விவாதத்திற்கே எடுக்கவும் மறுப்பு
நல்லூரில் சேதமாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை மீள அமைத்து உருவச்சிலை அமைப்பது தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சபை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டது.
நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் சேதமாக்கப்பட்ட நினைவுத் தூபியை மீளவும் அவ்விடத்தில் அமைத்து அதற்கு முன்பாக தியாகி திலீபனின் முழு உருவச் சிலையை உள்ளூராட்சி அதிகாரத்திற்குட்பட்டு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேரணையை மாநகர சபை உறுப்பினர் மு.உதயசிறி மாநகர சபைக்கு சமர்பித்திருந்தார்.
இவ்விடயம் நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புபட்டது என்பதால் சபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவல் குறித்த உறுப்பினருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் உதயசிறி கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாநகர சபை அமர்வில், பிரேரணை முன்மொழிவை சபை வாக்கெடுப்புக்கு விடாமல் ஏன் முதல்வரால் நிராகரிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
இதனால் சபையில் சிறிது நேரம் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன . அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் மாநகர முதல்வரும் ஈபிடிபி உறுப்பினருமான யோகேஸ்ரி பற்குணராஜா, குறித்த பகுதி நல்லூர் மாநகர சபைக்கு சொந்தமான பகுதியல்ல. அது நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமானது. தனியார் பகுதியில் அரச நிதியை செலவழித்ததாக வழக்கு நடைபெறுகிறது. ஆகவே குறித்த இடத்தில் நினைவு தூபியை அமைப்பதற்கு மாநகர சபையால் முடியாது எனத் தெரிவித்தார்.
குறித்த விடயத்திற்கு பதிலளித்த மாநகர முதல்வர், குறித்த தூபி அமைந்துள்ள பகுதி தொடர்பாக சர்ச்சை உள்ளது. இது தொடர்பில் நல்லூர் பிரதேச செயலாளராக இருந்த ஒருவருக்கு சிஐ டி விசாரணை நடைபெறுகிறது. சட்ட சிக்கல் இருக்கிறது. ஆகவே இதை சபை நிதியில் செய்யாமல் வெளியில் நிதியை எடுத்து செய்ய முடியும். நாங்கள் திலீபனுக்கு எதிரானவர்கள் அல்ல. சபையில் அஞ்சலித்தோம் என்றார்.

