
செவ்வந்தி குழுவினரை நாடு கடத்திய நேபாளம்; தப்பிக்க எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினரை நேபாள அரசாங்கம் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் மற்றுமொரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று முன்தினம் அதிகாலை நேபாளத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இஷாரா செவ்வந்தியுடன் மற்றைய சந்தேகநபர்களும் நேற்று புதன்கிழமை நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இஷாரா செவ்வந்தியுடன், இலங்கை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா (33 வயது), தக்சி நந்தகுமார் (23 வயது), தினேஷ் சியமந்த டி சில்வா (4 9வயது), கென்னடி பஸ்திம்பிள்ளை (35வயது ) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம் ஆச்சிர்ச்சாகே (43வயது) ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இஷாரா செவ்வந்தியை அழைத்து வர நேபாளத்துக்கு விசேட அதிரடிப்படையினர் விரைந்த நிலையில், கூட நேபாள அரசும் இதில் ஆர்வம் காட்டி இவர்களை நாடு கடத்தியுள்ளது.
இதன்படி ‘காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகமும் இந்த சம்பவத்தில் ஆர்வம் காட்டியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ந்த செவ்வந்தி
இதேவேளை தம்மைக் கைது செய்ய வந்த ரொஹான் ஒலுகலவைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போன இஷாரா, “ஒலுகல சேர்!” என்று கூற, அதற்கு அவர் “ஆ… பிள்ளையே, எப்படி இருக்கிறாய்?” என்று பதிலளித்துள்ளார்.
என்றாவது ஒரு நாள் ஒலுகலவினால் தாம் கைது செய்யப்படுவோம் என்று நினைத்திருந்ததாகவும், ஏழு மாதங்களாக நேபாளத்தில் சிக்கித் தவிப்பதை விட, இலங்கைக்குச் செல்வது சுகம் என்றும், ஆனால் காவல்துறையில் சிக்குவோம் என்ற பயத்தினால் அங்கேயே தங்கியிருந்ததாகவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ‘கெஹெல்பத்தர பத்மே’ குழுவுடன் தொடர்புடைய மேலும் இரண்டு குற்றக்குழு உறுப்பினர்களும் பெண் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகின.அதன்படி, காத்மண்டு நகரில் வேறொரு இடத்தில் மறைந்திருந்த அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அங்கு வைத்து ‘பத்மே’ குழுவின் முக்கிய உறுப்பினரான ‘கம்பஹா பபா’ என்பவர், தம்மை விடுவிப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவுக்கு 50 இலட்சம் ரூபா கையூட்டல் கொடுக்க முயன்ற போதும், அந்த யோசனையை நிராகரித்த ஒலுகல, மூவரையும் கைது செய்துள்ளார்.
சாவகச்சேரி பெண் தக்ஷி
கைது செய்யப்பட்ட மற்றைய பெண், சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி என்றும், அவர் இஷாரா செவ்வந்தியைப் போலவே தோற்றமளிப்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தப் பெண்ணின் தகவல்களையும் படங்களையும் பயன்படுத்தி, இஷாரா செவ்வந்திக்கு போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கவும், அதன் மூலம் அவரை ஐரோப்பாவிற்குத் தப்ப வைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதால் அந்தத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
மேலும் “நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும்” என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட போதே இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
“நேபாளத்தில் நான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தேன். இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. இங்கு இருப்பதைவிட எனது நாட்டிற்கு செல்வது சுகம் என நினைத்தேன். எப்போது எனது நாட்டிற்கு செல்வேன் என்று இருந்தேன். ஆனால் நான் எனது நாட்டிற்கு சென்றால் பொலிஸார் என்னை கைதுசெய்வார்கள் என்பதால் விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன்” எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

