
தமிழர்களே என்றும் உடனிருப்பர்; இந்தியாவுக்கு இலங்கை துரோகம் இழைக்கும்
இந்தியாவின் உண்மையான நட்புச் சக்தியாகத் தமிழர்கள் மாத்திரம் தானிருக்க முடியும். சிங்களதேசம் ஒருபோதும் இந்தியாவின் நட்புச் சக்தியாக இருக்காது. அவர்கள் எப்போதும் இந்திய விரோதிகளுடன் தான் உறவுகளை வைத்துக் கொள்வார்கள். இன்று தங்கள் தேவைக்காக இந்தியாவுடன் தான் அனுசரித்துப் போவதாகக் காட்டிக் கொண்டாலும் நீண்ட எதிர்காலத்தில் சிங்கள தேசம் நிச்சயமாக இந்தியாவுக்கு மாறான சக்திகளுடன் தான் உறவுகள் வைத்துக் கொள்வார்கள். ஆகவே, இந்தியா தொடர்ந்தும் தவறான இராஜதந்திர அணுகுமுறைகளைக் கையாளக் கூடாது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய இராணுவம் நடாத்திய ஈழத் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள் வரிசையில் முதல் சம்பவமாகப் பதிவாகிய கொக்குவில் கிழக்கு பிரம்படி கொடூரப் படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள,படுகொலை செய்யப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான நினைவுத் தூபியடியில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில்,
கொக்குவில் பிரம்படிப் பகுதியில் பல கல்விமான்கள், அரச திணைக்களங்களில் பணியாற்றியவர்கள் மிகவும் கொடூரமான முறையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பலரும் குற்றுயிராகக் காணப்பட்ட போது அவர்களுக்கு மேலாக கவச வாகனங்கள் ஏற்றிச் செல்லப்பட்டு மோசமான முறையில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்வது இந்தியாவுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துவதற்கல்ல. மாறாக இந்தியா தான் ஏற்றுக் கொண்ட வரலாற்றுக் கடமையைத் தவறவிட்டு 38 ஆண்டுகள் கடந்திருக்கிறது என்பதை இந்திய அரசு உணர்ந்து செயற்பட வேண்டும்.
தமிழ்மக்கள் தொடர்ந்தும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளால் அழிந்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் இலங்கையில் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டுத் தமிழர்களின் தேசம், இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஒரு சமஷ்டித் தீர்வைத் தமிழ்மக்கள் பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும். இதன்மூலம் தமிழ்மக்கள் இந்தியாவுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கானதொரு வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

