
திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம்
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துப் பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் கூட இன்றி அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (15) தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் ஆரம்பமாகவுள்ளது.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் திலீபன் உண்ணா நோன்பை ஆரம்பித்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில் உண்ணாநோன்பு ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் ஈகச்சுடர் ஏற்ற, சமநேரத்தில் நல்லூரிலுள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் ஈகைச் சுடரேற்றலுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்களும் நல்லூரில் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்படி நினைவுத் தூபியடியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று இறுதிநாள் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் இடம்பெறும்.பன்னிரண்டு தினங்களும் நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும்.
வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் புலம்பெயர் தேசங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.