
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இறுதிக் கட்டத்தில்; வரைவு இவ்வாரம் நீதி அமைச்சரிடம் கையளிப்பு
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வரைவு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் இறுதி வரைவு இந்த வாரத்துக்குள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கையளிக்கப்படுமென குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தெரிவி்த்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை வரைவுசெய்வது தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் கூடிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இடம்பெறும் பிரச்சினைக்குரிய இடங்களை தொடர்ந்தும் இனம்கண்டுகொண்டு, சட்டமூலத்தை இரண்டாவது தடவையாகவும் ஆராயும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதுடன் தற்போது அது நிறைவடையும் தருணத்தில் இருக்கிறது.சட்டமூலம் தொடர்பில் குழு தொடர்ந்து கலந்துரையாடி வருவதுடன், அதன்போது நாளாந்தம் கலந்துரையாடி ஏற்படுத்திக்கொள்ளும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு சட்டமூலத்தை வரைவு செய்யும் நடவடிக்கை , சட்ட வரைவு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது .
அதற்கமைய புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வரைவு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் இறுதி வரைவு இந்த வாரத்துக்குள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கையளிக்கப்படும் என்றார்.
நீதி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்ட ஜனரால் ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புள்ளே, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மேலதிக செயலாளர் பியமுன்தி பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உள்ளிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.