
ஈழத் தமிழர்கள் இன்னும் கண்ணீருடன் தான்; கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவிப்பு
தமிழ்நாட்டின் மதுரையில் மண்ணைத் தோண்டியதன் மூலம் தமிழின் தொன்மையும், சிறப்பும் வெளிப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் மண்ணில் மண்ணைத் தோண்டத் தோண்ட துடித்து துடித்து மரணித்த குழந்தைகளும், இளையவர்களும், தாயும், சேயும் மண்ணுக்குள்ளிருந்து எலும்புக் கூடுகளாக மீட்கப்படுகின்ற நிலை தொடருகிறது. கடலுக்குக் கூட எல்லை வைத்த கடவுளே. ஈழத் தமிழர்களின் கண்ணீருக்கு எல்லை வைக்க மாட்டாயா? என இந்திய அறிஞன் ஒருவன் பாடினான். ஈழத் தமிழர்கள் இன்னும் கண்ணீருடன் தான் இருக்கிறார்கள் எனச் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறையுடன் இணைந்து தஞ்சாவூர் அனைத்துலகப் பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு திருநெறி தமிழ் சைவசமயப் பாதுகாப்புப் பேரவை, லண்டன் தமிழ் கல்வியகம், லண்டன் உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம், பிரான்ஸ் இந்திய வம்சாவளி மக்களுக்கான அமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய அனைத்துலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டின் ஆரம்ப விழா நேற்றுத் திங்கட்கிழமை (30) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் கோலாகலமாக இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்மொழி வாழ வேண்டும், எங்கள் பண்பாடு வாழ வேண்டும், தமிழினம் வாழ வேண்டும் என்பதற்காகப் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை இழந்ததும் இந்த மண் தான். வாழ வேண்டிய வயதில் எங்கள் மண்ணுக்காகப் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் துணிந்து உயிர் கொடுத்தது எங்கள் மண்ணுக்கான தனித்துவ வரலாறு.
தற்போதும் ஒன்றரை லட்சம் ஈழ அகதிகளை வைத்துப் பராமரிப்பதற்காகவும், அவர்களின் வாழ்வுக்கு உறுதுணை செய்வதற்காகவும் இந்தியாவுக்கும்,, தமிழ்நாட்டு அரசுக்கும் நன்றிகள் கூறுகின்றோம். இந்திய தேசம் என்பது எங்களுக்குத் தாய்நாடு போலத் தான்.
மதுரையில் கீழடி நாகரிகத்தைப் பற்றித் தற்போது ஆராய்ந்து தமிழர்களின் பண்பாடு கிறிஸ்துக்கு முன் பத்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வித்திட்டவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள். ஒருகாலத்தில் அந்த மாநாடு நடைபெறுவதற்கு வித்திட்டவர்களில் இன்று உயிருடனிருப்பவர் மறவன்புலவு சச்சிதானந்தன். உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ் மண்ணில் மீண்டும் பெரியளவில் நடைபெற வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் காத்திருக்கின்றோம் என்றார்.