
மனிதப் புதைகுழி விடயங்களை மூடி மறைக்க நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை
செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில்,
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமானால் இந்த மனிதப் புதைகுழிகளை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும். அதனால்தான் ‘அணையா விளக்கு’ போராட்டம் அறிவிக்கப்பட உடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும் பெருந் தொகையாக கட்சி அடையாளங்களைத் தவிர்த்து அதிலே கலந்து கொண்டார்கள்.
வெளி நாட்டிலே இருந்த காரணத்தினால் என்னாலும் வேறு சிலராலும் இதில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த மனிதப் புதைகுழியும் வடக்கு கிழக்கிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றைய மனிதப் புதை குழிகளும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையோடு சரியான முறையிலே அகழாய்வு செய்யப்பட வேண்டும். விஞ்ஞான பூர்வமாக இது அணுகப்பட வேண்டும்.
இதற்கான முயற்சிகளை சர்வதேச நிறுவனங்களுடன் நாம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறோம். மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாயில் தற்போது கைவிடப்பட்டதைப் போல் இந்த விடயங்களை மூடி மறைக்க நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. – என்றுள்ளது.