
இலங்கையில் ஒரே நாளில் 4 பெண்கள் அடித்துக் கொலை (ஒரே பார்வையில்…)
சகோதரனும் சகோதரியும் அடித்துக் கொலை
நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
அதே நேரத்தில் அவரது மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 32 வயதுடைய ஒருவரும் அவரது 25 வயது சகோதரியும் ஆவர்.
சந்தேக நபர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறையில் வீடொன்றில் இருந்து தந்தை, மகள் சடலமாக மீட்பு
களுத்துறை – ஹினட்டியங்கல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 69 வயதுடைய தந்தை மற்றும் 33 வயதுடை மகள் ஆகியோரின் சடலங்களே நேற்று இரவு இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருவரின் சடலங்களும் களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தெமடகொட புகையிரத நிலைய உணவகத்தில் பெண் ஒருவர் கொலை
தெமடகொட புகையிரத நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தெமட்டகொட புகையிரத நிலையத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 29 ஆம் திகதி இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் வைத்திருந்த மூன்று தங்க நகைகள், மூன்று தங்க மோதிரங்கள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தனது 10 வயது மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் உணவகத்தில் கடமையாற்றிய மூன்று ஊழியர்கள் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று (31 காலை பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெண் எவ்வாறு உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
