1,46,000 ஆத்மாக்கள் உங்களை சும்மா விடாது; ராஜபக்ஸ குடும்பத்திற்கு சாபமிட்ட சிறிதரன்

1,46,000 ஆத்மாக்கள் உங்களை சும்மா விடாது; ராஜபக்ஸ குடும்பத்திற்கு சாபமிட்ட சிறிதரன்

1,46,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த ராஜபக்ஸ குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்தக்காலத்திலும் நிம்மதியோடு இருக்கப்போவதில்லை, உறங்கப் போவதில்லை. இறந்துபோன முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள்.இவர்களை ஒருபோதும் நிம்மதியாக இருக்க விடப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிதிக்கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

யுத்தம் நடைபெற்றபோது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஸ ,யுத்தம் நடக்கின்ற பிரதேசங்களில் 75,000 மக்கள் மட்டுமே உள்ளார்கள் என்று கூறினார். ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் 4,10,000க்கும் மேற்பட்ட மக்கள் வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டார்கள்.75,000 மக்களுக்கு உணவு அனுப்பி 4,00,000 மக்களை பட்டினி போட்டு பட்டினியால் மக்கள் சாகடிக்கப்பட்டார்கள். 4,10,000 மக்கள்தான் இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்றால் எத்தனை ஆயிரம் மக்கள் அங்கே கொன்றொழிக்கப்பட்டார்கள் .கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள் மீது குண்டுகளை வீசி அவர்கள் கொல்லப்பட்டார்கள் .இதனை செய்தவர் கோத்தபாய ராஜபக்ஸ .

69 இலட்சம் சிங்கள வாக்குகளினால் நான் வந்தவன்.எனக்கு தமிழ் வாக்குகள் தேவையில்லையென மார்தட்டி வந்த கோத்தபாய ராஜபக்ஸவை அதே சிங்கள மக்கள் ,அதே சிங்கள இளைஞர்கள் ‘அரகலய’ போராட்டத்தின் மூலம் ஓட ஓட விரட்டினர்.தர்மம் வென்றது. கர்மம் அவரை நாட்டிலிருந்து அகற்றியது. இருக்க இடமில்லாமல் தெருத்தெருவாக திரிந்தார்.

இறந்துபோன முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் இன்றும் கோத்தபாய ராஜபக்ஸவை நிம்மதியாக உறங்க விடவில்லை. இந்தப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் 1,46,000 க்கும்மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த ராஜபக்ஸ குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்தக்காலத்திலும் நிம்மதியோடு இருக்கப் போவதில்லை. உறங்கப்போவதில்லை என்பதைத்தான் கர்ம வினை என்பதும் அவர்களின் வரலாறு என்பதும் அவர்களுக்கு கற்பிக்கும்.

75,000 மக்களுக்கு உணவு அனுப்பி அங்கு இந்தளவு மக்கள்தான் இருக்கின்றார்கள் என்று கூறி ஆயிரக்கணக்கான மக்களை பட்டினியால் கொன்றவர்களுக்கு இந்த உலகம் என்ன தண்டனை வழங்கப்போகின்றது?மக்கள் அங்குள்ள ஐ.நா.அமைப்புக்கள்,செஞ் சிலுவை சங்கம் போன்றவற்றின் முன்னால் நின்று எங்களை விட்டுபோகாதீர்கள் எனகதறியபோது இந்த அமைப்புக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வன்னியிலிருந்து வெளியேறின. அந்த மக்களை தெருவிலே விட்டு இந்த அமைப்புக்கள் தப்பியோடின . இவர்கள் கைவிட்டு ஓடியதால் அத்தனை ஆயிரம் மக்கள் அந்த மண்ணில் கொல்லப்பட்டார்கள். இதற்கு ஐ.நா.மற்றும் சர்வதேச அமைப்புக்கள் பொறுப்பு சொல்ல வேண்டும். வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் கொல்லப்பட்டதற்கு நோர்வே சமாதானத்தூதுவர் எரிக் சொல் ஹெய்மும் பொறுப்புக்கூற வேண்டும். இன்றும்தமிழர் தெருவில் நிற்பதற்கு யார் காரணம்?

யுத்தத்திற்கு இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கிய நாடுகள் யுத்தம் முடிந்த பின்னர் தமிழர் பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்க முன்வரவில்லை?ஏன் இந்த நாடுகளினால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை?ஆகவே நாங்கள் பேச முடியாத மனிதர்களாக, அநாதைகளாக, உலகப்பந்தில் ஒதுக்கப்பட்ட ஒரு இனமாக இருக்கின்றோம்.தமிழ் தேசிய இனம் தொடர்ந்தும் அழிக்கப்படுகின்றது .அந்த இனத்தின் நிலம்,உரிமை பறிக்கப்படுகின்றது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )