
சஜித் தரப்பினரின் எம்.பி. பதவிகளுக்கு ஆபத்தா ?
நாட்டின் பிரஜையல்லாத டயனா கமகேயினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டபூர்மானதா? என்ற கேள்விகள் எழுவதுடன், கடந்த பொதுத் தேர்தலின் போது கட்சியின் வேட்பு மனுவில் அவர் கையெழுத்திட்டிருந்தாலோ, தற்போதைய கட்சி செயலாளருடன் அவர் உடன்படிக்கையை செய்திருந்தாலோ அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடலாம் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்திப்பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் கூறுகையில்,
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேயின் எம்.பி பதவி தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை. ஆனால் இதில் பிரச்சினையொன்று உள்ளது. இலங்கை குடியுரிமை இல்லையென்றே அவரின் எம்.பி. பதவி இல்லாமல் போகின்றது. இங்கு எதிர்க் கட்சியிலுள்ள எம்.பிக்கள் பலரின் கட்சியை பதிவு செய்து கையெழுத்திட்டவர் அவரே. இதனால் ஐக்கிய மக்கள் சக்தி சட்டப்பூர்வமானதா? என்ற பிரச்சினைகள் எழும். அவரே கட்சியை இவர்களிடம் கொடுத்துள்ளார். அவர் அந்தக் கட்சியை பதிவு செய்யும் போது அவர் இலங்கை பிரஜையாக இல்லாமலே இருந்துள்ளார். இந்த நாட்டை சேர்ந்தவர் அல்லாத ஒருவருக்கு கட்சியை பதிவு செய்ய முடியாது.
அத்துடன் வேட்பு மனுவிலும் அவரா? கையெழுத்திட்டார் என்பதும் தெரியாது. அப்படி அவர் கையெழுத்திட்டிருந்தால் அது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டி வரலாம். எம்.பிக்கள் பலர் பாராளுமன்ற உணவகத்தில் கதைக்கும் போது மிகவும் குழப்பத்தில் இருப்பது போன்றே இருந்தது என்றார்.
இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், கட்சி பதவிகள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது இதில் பிரச்சினைகள் கிடையாது என்றார்.
இதனை தொடர்ந்தும் மீண்டும் உரையாற்றிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறுகையில், அப்படியில்லை, இப்படியில்லை என்று கூறினாலும் இது நீதிமன்றம் செல்லும் பிரச்சினையாகும். நீதிமன்றத்தில் அது தொடர்பில் கூற வேண்டி வரும். வேட்பு மனுக்களில் யார் கையெழுத்திட்டது என்றும் பரிசோதிக்க வேண்டி வரும். இதனால் விவாதங்களுக்கு நேரத்தை செலவிடுவதை விடுத்து, இந்த விடயத்திற்கு முகம்கொடுப்பதற்கு தயாராகுங்கள். உங்களுக்கு இந்த விடயத்தில் ஏதோவொரு பிரச்சினை உள்ளது. அவ்வாறு நடக்கக் கூடாது என்றே பிரார்த்திக்கின்றேன்.
எவ்வாறாயினும்,நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர் கட்சியை உருவாக்கியிருந்தால், அவர் அந்தக் கட்சியை உங்களிடம் கொடுத்திருந்தால்,வேட்பு மனுவில் கையெழுத்திட்டிருந்தால், அவருக்கும் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கும் இடையே ஏதாவது உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தால் பிரச்சினை இருக்கும். இப்போதே சிறந்த சட்டத்தரணி குழுவினரை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் பக்கத்தில் இருந்து வந்தவர்களை சட்டத்தரணிகளாக வைத்திருக்க வேண்டாம். அப்படி செய்தால் இன்னும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம் என்றார்.

