
ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ரணிலை தொடர்ந்தும் சந்திக்கும் பசில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இந்தச் சந்திப்புஇடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணிலுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் சமீப காலங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான விடயங்கள் இரகசியமாகப் பேணப்படும் நிலையில், இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்களை ராஜபக்ச குடும்பத்தினர் விரும்பவில்லையெனத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
இருவருக்கும் இடையில் இடம்பெறும் கலந்துரையாடல்களின் மூலம் பசில் ராஜபக்ச, ஜனாதிபதிக்கு உதவி செய்கின்றாரா என ராஜபக்ச குடும்பத்தினர் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவாராயின் அது நாமல் ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டே இருவருக்குமிடையிலான சந்திப்புகளை அவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நியமன ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சியின் ஒரு அங்கமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் முதலில் எதை நடத்த வேண்டுமென தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்னரும் இதே கோரிக்கையை பொதுஜன பெரமுன பல தடவைகள் முன்வைத்திருந்தது. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
எனினும் அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அனைத்துக் கட்சிகளிடமும் எழுத்துப்பூர்வமாக ஆதரவை கேட்பது சிறந்தது என ஏப்ரல் 23ஆம் திகதி நடந்த சந்திப்பில் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
அத்துடன், அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சந்திப்பின்போது தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டது.

