
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சி நல்ல முடிவெடுக்கும்
ஜனதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி முடிவு எடுப்பதற்கு இரண்டு கிழமை அவகாசம் கேட்டுள்ள நிலையில் அவர்களும் ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்றே நம்புவதாக ரெலோவின் பொது செயலரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான கோவிந்தம் கருணாகரன் தெரிவித்தார்
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப் பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
2009 க்கு பின்பு தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் நடுச்சந்தியில் திக்கு தெரியாமல் நிற்கும் போது தமிழ் தேசியக் கட்சிகள் எங்களுக்குள்ளேயே பிளவு பட்டிருப்பது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
அந்த வகையில் வடகிழக்கு சிவில் சமூக குழுவானது சனிக்கிழமை ஒரே மேசையிலே தமிழ் தேசியக் கட்சிகளை அழைத்திருந்தமை மகிழ்வான தருணமாக இருந்தது .இந்தக் கூட்டு தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் ஒரு அரசியல் கூட்டம், தமிழ் மக்களது விடுதலை, தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான கூட்டாக அமையுமாக இருந்தால் உண்மையிலேயே நாங்கள் அனைவரும் சந்தோஷப்பட முடியும்.
இன்னும் நாங்கள் இந்த சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஏமாறாமல் எங்களது ஒற்றுமையை காட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. ஒற்றுமையை காட்டுவதுடன் அவர்களை வழிக்கி கொண்டு வர வேண்டிய ஒரு நிலையாகவும் இருக்கலாம்.
இலங்கை தமிழரசுக் கட்சி தங்களுக்குள் ஒரு முடிவு எடுப்பதற்கு இரண்டு கிழமை அவகாசம் கேட்டிருக்கின்றார்கள் அந்த வகையில் அவர்களும் ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன் இந்த வகையில் தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றார்

