
ரணில் மொட்டு வேட்பாளரல்ல; போட்டியிட்டால் அவருக்கே ஆதரவு
மொட்டுக் கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், இதனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவரை ஆதரிப்போம் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்த நேரத்தில் மக்கள் முகம்கொடுத்துள்ள நெருக்கடிகளில் இருந்து அவர்களை மீட்பது தொடர்பான வேலைத் திட்டங்கள் தொடர்பிலேயே அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வருகின்றது. இதற்காக நாங்கள் அவதானத்தை செலுத்தியுள்ளோமே தவிர, தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. எவ்வாறாயினும் அரசியலமைப்பு ரீதியில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் நடக்கும்.
எமது நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.
மொட்டினால் முன்னிலைப்படுத்தப்படும் குழுவை எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பான கலந்துரையாடல்களும் இதுவரையில் நடத்தப்படவில்லை. ஆனால் இந்த நேரத்தில் நாட்டை கட்டியெழுப்பிய தலைவர் என்ற ரீதியில் நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவோம். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். ஒவ்வொருவரும் ஜனாதிபதிக்கான ஆடைகளை தயாராக வைத்திருக்கலாம். ஆனால் மக்கள் வாக்களிப்பவரே பெறுமதியானவர் என்றார்.

