
சு. க. தவிசாளர் பதவியிலிருந்து மைத்திரி விலக முடிவு?
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தால் அவர் குறித்த பதவியை வகிப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு தனது தரப்பில் ஒருவரை நிரந்தரமாக நியமித்து அவர் பதவி விலகலை அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே கட்சியின் பதில் தவிசாளர் பதவிக்கு சந்திரிகா குமாரதுங்க அணியினால் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், மைத்திரிபால சிறிசேன அணியினரால் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலைமையில் கட்சிக்குள் உறுப்பினர்களிடையேயான முறுகள் அதிகரித்து, கட்சி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதால் மைத்திரிபால சிறிசேன பதவி விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றதுது.
இவர் தவிசாளர் பதவியில் இருந்து விலகியதும், கட்சியின் போசகர் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் விஜேதாச ராஜபக்ஷவை நிரந்தர தவிசாளராக நியமிக்க மைத்திரிபால சிறிசேன தரப்பில் திட்டங்கள் வகுக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இவருக்கு எதிரான தரப்பினரால் சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் தவிசாளராக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.