நாட்டை அழித்தோருடன் கர்தினாலுக்கும் தொடர்பு இனியும் அவரிடம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்கிறார்

நாட்டை அழித்தோருடன் கர்தினாலுக்கும் தொடர்பு இனியும் அவரிடம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்கிறார்

தெரிந்தோ, தெரியாமலோ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு சென்ற குழுவினருக்காக செயற்பட்டுள்ளார் என்றும், இனியும் அவரிடம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்‌ஷவை நம்பி தான் ஏமாந்துள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கூறியுள்ளமை தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவிக்கையிலேயே பாலித ரங்கே பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது பாலித ரங்கே பண்டார மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 273 பேர் உயிரிழந்ததுடன் 500 பேர் வரையில் காயமடைந்தனர். இது மிலேச்சத்தனமான தாக்குதலாகும். இந்தத் தாக்குதலின் பின்னர் தேர்தல் காலத்தில் கோத்தாபய ராஜபக்‌ஷவின் பேச்சுக்களை நம்பி அவருக்காக செயற்பட்டதாக கர்தினாலால் இப்போது கூறப்பட்டுள்ளது. தான் கோத்தாபய ராஜபக்‌ஷவை நம்பி ஏமாந்ததாகவும் கூறியுள்ளார்.

சர்வதேச தொடர்புகள் இல்லாத, யுத்தத்தின் போது நாட்டில் இருந்து சென்ற ஒருவரிடம் 2 கோடியே 20 இலட்சம் மக்களையும் ஒப்படைக்க கர்த்தினாலும் செயற்பட்டுள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள கருத்தின் மூலம் வெளிப்படுகின்றது.

இந்த நிலைமையில் நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவுகள் என்ன? உலக நாடுகளிடம் இலங்கை வாங்கி கடனை செலுத்த முடியாது போனது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் போனது. இதனால் மக்கள் சட்டத்தை கையில் எடுத்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்படி கர்த்தினால் தெரிந்தோ, தெரியாமலோ இந்த நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு சென்ற குழுவினருக்காக செயற்படவில்லையா என்பதனை புத்தியுள்ள மக்கள் சிந்திக்க வேண்டும்.

இதேவேளை ஜே.வி.பியின் குழுவினர் சென்று கர்தினாலை சந்தித்துள்ளனர். வத்திக்கானை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்தினாலிடம் சில கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். உங்களின் தேசியப் பட்டியலில் இருந்த ஒருவரின் பிள்ளைகள் இரண்டு பேர் தாக்குதலில் இருந்தமை தொடர்பில் கேட்டிக்கலாம். தயவு செய்து தேசிய மக்கள் சக்தியிடம் கேட்டீர்களா? என்று கேட்கின்றோம்.

முதலில் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு நாட்டை காட்டிக் கொடுத்த கர்தினால், இரண்டாவது தடவையாகவும் கொலைக்கார குழுவினருக்கு நாட்டை காட்டிக்கொடுக்கப் போகின்றீர்களா? ஒருதடவை கோத்தாபய ராஜபக்‌ஷவிடம் கர்த்தினால் ஏமாந்தார். மக்கள் கர்த்தினாலிடம் ஏமாந்தனர். இனியும் கர்தினாலின் நடிப்புகளுக்கு மக்கள் ஏமாற வேண்டுமா என்றும் கேட்கின்றோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )