தமிழ் வேட்பாளர் விஷப் பரீட்சை; சி.வி.கே. சிவஞானம் கூறுகிறார்

தமிழ் வேட்பாளர் விஷப் பரீட்சை; சி.வி.கே. சிவஞானம் கூறுகிறார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது என்பது விஷப் பரீட்சை என்பதுடன் மீறி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்தால் பொது வேட்பாளர் தெரிவுடன் அது முடங்கும் நிலை ஏற்படும் என வடக்கு மாகாண சபை அவை தலைவர் சிவி கே சிவஞானம் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை யாழ் கல்வியங்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என பலரும் பல விதமாக பேசி வருகின்றனர்.

ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற வகையில் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் என்னுடைய கருத்து, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது விஷப் பரீட்சை ஒன்றுக்கு செல்வதற்கு சமமானது.

அவ்வாறு பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்தால் தெரிவு செய்த அன்றுடன் பொது வேட்பாளர் தெரிவு முடங்கும் நிலை உருவாகும்.

ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பிரதேச வாதம், மதவாதம் மேல் எழுந்து வேட்பாளர் தெரிவை கைவிடும் நிலையை அவர்களே உருவாக்குவார்கள்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பிள்ளையான், கருணா, வியாலேந்திரன் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வர மாட்டார்கள் அதேபோல் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வரமாட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் கணிசமான வாக்கு வங்கிகளை இவர்கள் பெற்றுள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் கிழக்கில் வாக்குகளை பெறுவது கடினம்.

அதேபோல் வடக்கு மாகாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சிக்கும் வாக்கு வங்கி உள்ளது.

அதேபோல் அங்கயன் இராமநாதனும் தென்சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து அதிக வாக்கு வங்கியை தக்க வைத்தவர்.

இவற்றையெல்லாம் தாண்டி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

1977 ஆம் ஆண்டு தந்தை செல்வாவின் இறுதிக்காலப் பகுதியில் தமிழ் மக்களின் கோரிக்கை என்ன என்பதை தெளிவாக கூறியும் அதை அடைவதற்கான பொது வாக்கெடுப்பு ஒன்றின் அவசியத்தையும் தெளிவாகக் கூறியுள்ளோம்.

அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் காலத்தில் 22 ஆசனங்களை எடுத்து நிரூபித்து காட்டியுள்ள நிலையில் தற்போது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி எமது கோரிக்கைகளை நிலநிறுத்த போகிறோம் என்பது எங்களுக்கே நாங்கள் வைக்கும் விஷப் பரீட்சை.

எமது மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் எல்லாம் தென்னிலங்கைக்கு கூறி வைக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக எமது கோரிக்கைகளை தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தித் தான் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கு கூறப்போகிறோம் என்பதை ஏற்க முடியாது.

ஆகவே பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யுங்கள் தேர்வு செய்த கணமே முடங்கும் நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )