
தமிழ் மக்களின் பொது வேட்பாளர் யார்?; பொதுக்குழு தீர்மானிக்கும் என்கிறார் விக்னேஸ்வரன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்ந்து பிரதிபலிக்கின்ற பொது வேட்பாளரை நாங்கள் தீர்மானிக்க மாட்டோம் பொதுக் குழுவே தீர்மானிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.நல்லூர் பகுதியில்உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்ந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்ந்து எமது பிரச்சினையை முன்வைக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடலை மேற்கொண்டோம்.
ஒரு தகவல் உரையாடலில் பல காரணங்களின் அடிப்படையில் அரசியல்வாதிகள் பலர் கலந்து கொள்ளா விட்டாலும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் கலந்துரையாடல் இடம் பெற்றது.
அவர்கள் தமிழ் மக்கள் சார்ந்து நிறுத்தப்போகும் பொது வேட்பாளர் தொடர்பில் சில சந்தேகங்களை முன் வைத்தார்கள் அதாவது யாரோ ஒருவரை இவர் தான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுடைய பொது வேட்பாளர் என அடையாளப்படுத்த போகிறீர்களா எனக் கேட்டார்கள்.
அதற்கு அவர்களிடம் தெளிவான விளக்கத்தை கூறினேன். யாரோ ஒருவரை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளர் என அறிமுகப்படுத்த முடியாது. பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் பொது அமைப்பின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் என தமிழ் மக்களை பிரதிபலிக்கும் அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி பொதுக் குழு ஒன்றை அமைப்போம்.
பொதுக் குழுவில் கலந்துரையாடப்பட்டு தமிழ் மக்கள் சார்ந்து அவர்களின் பிரச்சினைகள் கோரிக்கைகள் மற்றும் தெளிவுபடுத்தல்களை முன்வைக்கக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரை பொதுக் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் தெரிவு செய்வோம் எனக் கூறினேன் அவர்களும் தமது விருப்பத்தை தெரிவித்தார்கள்.
பொதுக்குழுவில் சில உப குழுக்களை உருவாக்கி பொது வேட்பாளராக தேர்வு செய்யப்படுபவர் தெற்கில் யாருடன் பேச வேண்டும் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என உருவாகவும் உப குழு தீர்மானிக்கும்.
இவ்வாறு பல விடயங்களை அவர்களுடன் பேசினோம் கலந்துரையாடல் முடிவில் அவர்களுக்கு சில குறிப்புகளை வழங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் எதிர்வரும் கலந்துரையாடல்கள் அமைய உள்ளது.
இதன் போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் ஜனாதிபதி வேட்பாளராக வரும் பெரும்பான்மைய இனத்தவர், தமிழ் மக்களுக்கு என்ன விடயங்களை செய்வார்கள் என்பது தொடர்பில் தூதரகங்களுக்கு எழுத்தில் வழங்க வேண்டும் என கூறினீர்கள் ஏன் அவ்வாறு கூறினீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய விக்னேஸ்வரன், இலங்கை அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை ஒருவர் முன்வைப்பதும் மற்றவர் எதிர்ப்பதும் தொடர் கதையாக இடம் பெற்று வருகிறது.
சந்திரிகா அம்மையார் காலத்தில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஐக்கிய தேசிய கட்சினர் அதனை மிகக் கடுமையாக எதிர்த்து தீர்வு யோசனை அடங்கிய நகலை தீயிட்டு கொளுத்தினார்கள்.அவர்களது கடும் எதிர்ப்பால் பின்னர் அது கைவிடப்பட்டது.
இவ்வாறான வரலாறுகள் தொடர்ந்து இடம்பெறுவதால் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மேற்படி வேட்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை வழங்கினால் சர்வதேசமும் உண்மைகளை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.
ஆகவே தற்போது இடம்பெற்ற கலந்துரையாடல் ஒரு பூர்வாங்க ஆரம்பக் கலந்துரையாடலாக இருக்கின்ற நிலையில் இரண்டாவது கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பொதுக்குழு ஒன்றை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.