
மே தினத்தில் விமலின் வேட்பாளர்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் மே தினக்கூட்டம் கிருலப்பனையில் இடம்பெறவுள்ளதுடன் அங்கு ஜனாதிபதி வேட்பாளர் பெயர் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மூலம் பாராளுமன்றம் சென்ற தயாசிறி ஜயசேகர, ரொஷான் ரணசிங்க ஆகியோருடன் வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வீரசுமன வீரசிங்க மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் இணைந்தே இந்த புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் ராஜபக்சக்களுக்கு எதிரான பரந்துபட்ட புதிய கூட்டணியாக உருவாகியுள்ளது. இதன்மூலம் பாராளுமன்றத்தில் தற்போது சிறு சிறு குழுக்களாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாராளுமன்றத்துக்கு வெளியே தேர்தலில் போட்டியிட தயாராகியுள்ள வேட்பாளர்களையும் இணைத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸில் அங்கம் வகித்த ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். அக்கட்சியின் தலைமை பொறுப்பை வகித்த டலஸ் அழகப்பெரும அக்கூட்டணியில் இணையவில்லை.
முன்னதாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் இணைந்து மேலவை மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கிய போதும் அவற்றில் அங்கம் வகித்த பலர் தற்போது அவற்றிலிருந்து விலகி செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது.