
தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் ராஜபக்க்ஷக்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தரப்பு வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்ற யோசனைகளின் பின்னால் ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிரூட்டும் செயற்பாடுகள் உள்ளனவா என்ற பாரிய சந்தேகங்கள் நிலவுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் தமிழ்த் தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சியொன்றிலேயே சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் வேட்பாளர் என முன்வருகின்ற போது, அதை மையமாக வைத்தே தீவிரவாத, இனவாத சிங்கள சக்திகள் ஒன்று சேர்ந்து அவர்களின் கரங்களை பலப்படுத்தும் சம்பவம் நிகழலாம். இதனால் தோற்றுப் போயுள்ள ராஜபக்ஷ தரப்பினருக்கு இது மீளவும் உயிரூட்டும் செயலாகவும் இது அமையலாம். அவர்களே முன்னைய காலங்களில் இவ்வாறான யுக்திகளை கையாண்டு தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இவ்வாறு நிறுத்திவிட்டு புலி வந்துவிட்டது என்ற புரளிகளை கிளப்புவர்.
அப்படி போட்டியிட்ட தமிழ் வேட்பாளர், பாராளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட குருநாகல் மாவட்டத்திலும் போட்டியிட்டார்.
ஆகவே தமிழ் வேட்பாளர் தொடர்பான முன்மொழிவுகள் வரும் போது, இதன்பின்னால் ராஜபக்ஷக்கள் இருக்கின்றனரா?, தீவிரவாத, இனவாத சிங்கள சக்திகள் இருக்கின்றனவா என்ற பாரிய சந்தேகங்களும் கேள்விகளும் எழுகின்றன. இல்லாவிட்டால் இது எவ்வளவுக்கு பொருத்தமானது என்ற கேள்விகளும் உள்ளன. இது தொடர்பில் சாதகமாக பரிசீலிப்போம் என்றும் எங்களால் கூற முடியாது என்றார்.