
சர்வதேச நீதிமன்றத்தில் கச்சதீவுப் பிரச்சினை!; தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுவதென்ன
தமிழ்நாடு இராமநாதபுரம் இராச்சியத்தை முதலில் ஆண்ட குடும்பத்துக்கே கச்சதீவு சொந்தமானதென வருவாய் பதிவுகள் உறுதிப்படுத்துவதாகவும் எனவே அதனை திரும்பப் பெற நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளதாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்கான இந்திய கூட்டணியின் வேட்பாளரும், ம.தி.மு.க.வின் தலைவருமான துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்ட அவர், 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த பிரதமர் இலங்கையிடமிருந்து மீட்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் இப்போது கச்சதீவை பற்றி பேசுவதாகவும் குறிப்பிட்டார்.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுக்க ஒரு போதும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கச்சதீவு தொடர்பான சர்ச்சையை இரண்டு ஆண்டுகள் ஒத்திவைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து மட்டுமே மத்திய அரசின் பிரதிநிதிகளிடம் அவர் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே இலங்கையிடமிருந்து கச்சதீவை திரும்பப் பெறுவதற்கு பெற நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.