
கச்சதீவை வைத்து இந்திய மீனவர் பிரச்சினையை திசை திருப்பாதீர்
கச்சதீவை வைத்து மீனவர் பிரச்சினையை திசை திருப்பாதீர்கள் என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சத்தீவு தொடர்பான பிரச்சனையை தமிழ்நாடு அல்லது இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரசாரங்களில் மேற்கொள்கிறார்கள்.
வடக்கு கடற்றொழிலாளர்கள் ஆகிய எங்களைப் பொறுத்தவரையில் கச்சதீவு என்பது இலங்கை ஆளுகைக்கு உட்பட்டது, இலங்கைக்கு சொந்தமானது. ஆனால் எங்களுக்கு பிரச்சினை அந்த இரட்டை இழுவை மடி, இதனை தீர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.
அதேநேரம் இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் மீனவர் சமூகத்தை தவறாக வழிநடத்தி கச்சதீவு தான் பிரச்சனை என்பதை அரசியல் கட்சிகள் முன் கொண்டு போவது எங்களுக்கு கவலையளிக்கின்றது.
நாங்கள் இலங்கை இந்திய மீனவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கின்றோம், அந்த தீர்வு தான் எங்களுக்கு தேவை, எங்களுடைய கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிக்க வராது இருந்தாலே எங்களுடைய வாழ்வாதாரத்தை நாங்கள் காப்பாற்றுவோம்.
கச்சதீவை விடுத்து நீங்கள் மீனவர் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை வைத்து அரசியல் செய்யுங்கள். கச்சதீவை காட்டி மீனவர் சமுகத்தை மீண்டும் படுகுழிக்குள் தள்ளாதீர்கள். கச்சதீவு பிரச்சினையை இந்திய அரசாங்கம் கையில் எடுக்குமாக இருந்தால் அது மிகப்பெரிய பாதகமான விளைவுகளை எதிர்காலத்தில் விளைவிக்கும் என்பதை இந்தியாவும் உணர்ந்து கொள்ள வேண்டும், இதைப் பற்றி பேசுகின்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வெறுமனே நீங்கள் கூறுவது இந்திய மீனவர்கள் தான் புறக்கணிக்கப்படுகின்றார்கள், அவர்களுக்குத்தான் சேதம் ஏற்படுகிறது என்று. ஆனால் எங்களுடைய சேதம் எங்களுடைய இழப்பு சொல்லொணா துயரத்தில் இருந்து பல கோடி ரூபாவை தாண்டிவிட்டது, ஆனால் எங்களுக்கு நீதியும் இல்லை இழப்பீடும் இல்லாமல் தொடர்ந்தும் நாங்கள் தவிர்த்துக் கொண்டிருக்கின்றோம்.
கச்சதீவு எங்களுடைய இறையாண்மைக்கு உட்பட்டது, அது எங்களுக்குரியது அதனை விடுத்து, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டப்பட்ட பேச்சுவார்த்தையின் தீர்விலே தீர்வு வரவேண்டுமே தவிர புதிதாக கச்சதீவை காட்டி எங்களுடைய பிரச்சி னையை திசை திருப்பாதீர்கள். இலங்கை இந்திய மீனவர்களை மோத வைக்கின்ற சதி மீண்டும் இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறுகின்றது.
இந்த பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவில் அனைத்து கட்சிகளும் பேசிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் கூட எங்களுடைய இறையாண்மைக்குள் இருக்கின்ற கச்சதீவு பிரச்சினை அல்லது மீனவர் பிரச்சனை தொடர்பாக என்னுடைய நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ, கடற்றொழில் அமைச்சரோ அல்லது வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களோ மௌனம் காப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.