
அரசியலில் ஈடுபட முடியாத அளவுக்கு பெரும் அச்சுறுத்தல்; பொலிஸாரால் பணியாளர்களுக்கும் மிரட்டல்
பொலிஸார் என்னை இலக்கு வைத்துள்ளதால் என்னால் சுதந்திரமாக அரசியலில் ஈடுபட முடியாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. என்னுடன் பணியாற்றினால் பொலிஸாரால் பழிவாங்கப்படுவோம் என்ற அச்சம் எனது பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் எனது கடமைகளை ஆற்றமுடியாமல் உள்ளது .எனவே எனது உரிமைகளை பாதுகாக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னை எம்.பி. செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வத்தபோதே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,
நான் கடந்த 08-03-2024 மகா சிவராத்திரி தினத்தன்று சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்திற்கு சென்றேன்..ஆலயத்திலிருந்து சுமார் 6 கிலோ மீற்றருக்கு முன்னதாக பொலிஸாரால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக எவரும் செல்ல முடியாதென பொது மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர் .
நானும் அங்கு நின்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ,ஏனைய பக்தர்கள் ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து, வீதியைத் தடை செய்து நின்ற பொலிஸாரிடம் குறித்த ஆலயத்திற்குச் சென்று வழிபட செய்ய அனுமதிக்க கோரினோம். ஆனால் பொலிஸார் மறுத்துவிட்டனர் . நாம் ஆலய வழிபாட்டினை தடுப்பதாயின் நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதா? இருந்தால் அதனைக் காண்பிக்குமாறு கோரினோம். எனினும் நீதிமன்றத் தடை உத்தரவு இல்லை ஆனால் அனுமதிக்க முடியாது என்றனர் . அப்போது நாம் , நீதிமன்றத் தடை உத்தரவு இல்லாதவிடத்து அரசியலமைப்பின் பிரகாரம் எமக்குள்ள மத சுதந்திரத்தை நீங்கள் தடை செய்வது சட்டவிரோதம் எனச் சுட்டிக்காட்டியதுடன் நாம் ஆலயத்தை நோக்கி நடந்தே சென்றோம்.
வாகனங்களை எடுத்துச் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை. அதனால் நாம் 6 கிலோ மீற்றர் தூரம் நடந்தே சென்றோம்
கொழுத்தும் வெயிலில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு ஆலய வழிபாட்டிற்குச் செல்லாமல் திரும்பிச் செல்லவைக்கும் நோக்கிலேயே பொலிஸார் அவ்வாறு மனிதாபிமானமற்று நடந்து கொண்டனர். ஆலயத்திற்கு வரும் பக்தர்களது குடிநீர்த் தேவைக்காக ஆலய நிர்வாகத்தினரால் எடுத்து வரப்பட்ட குடிநீர்த்தாங்கி ஏற்றிய உழவு இயந்திரத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர். அதனால் அதிக தாகம் காரணமாக ஆலயத்திற்கு அண்மையில் இருந்த நீரோடை ஒன்றிலிருந்து எடுத்துவரப்பட்ட சுகாதாரமற்ற நீரை அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
நாம் ஆலய பகுதியில் குழுமிருந்து சிவனை நோக்கிய பயனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்குள் நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி செனவிரத்தின, கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் ரத்நாயக்கா , உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரபாஸ்ஹாலகே ஆகியோரது தலைமையில் சப்பாத்துக்கால்களுடன் உள்நுழைந்த ஆண்,பெண் பொலிஸார் ஆலய விக்கிரகங்களை ,பூஜைப் பொருட்களை, பக்தர்களை சப்பாத்துக்கால்களினால் உதைத்து தள்ளி வெளியேற்ற முயன்றனர்.
எனினும் அனைத்து பக்தர்களும் தொடர்ந்தும் அவ்விடத்தினை விட்டு அகலாமல் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததோம். இரவு 7.30 மணியளவில் உதவி பொலிஸ் அத்தியட்ர் பிரபாஸ்காலகே, நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனவிரத்தின , கனராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் ரத்நாயக்கா ஆகியோர் கைது உத்தரவுகளை வழங்கியவாறு என்னையும் அங்கிருந்த ஏனைய 8 நபர்களையும் தாக்கி கைது செய்தார்கள். என்னை காலிலும் கைகளிலும் பிடித்து கொலைக்குற்றவாளியைத் தூக்குவதுபோன்று தூக்கிச்சென்றார்கள். எனினும் சுமார் 50 மீற்றர் தூரத்தில் என்னை கீழே போட்டுவிட்டார்கள். பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லவில்லை.
அதேவேளை தம்பிராசா மதிமுகராசா ,துரைராசா தமிழ்ச் செல்வன் ,மகேந்திரன் நரேந்திரன் ,சிவம் லக்சன் ,கந்தசாமி கௌரிகாந்தன் ,திலகநாதன் கிந்துஜன் ,இராசரத்தினம் விநாயகமூர்த்தி ,சுப்பிரமணியம் தவபாலசிங்கம் ஆகிய 8 பேரை செய்தனர் 8 பேரில் பாராளுமன்ற உறுப்பினராகிய எனது செயலாளர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டு நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனவிரத்தினவின் உத்தரவில் அவரது வேட்டி உரியப்பட்டு அரை நிர்ணவாகமாக்கப்பட்டதுடன் காட்டுப்பாதையூடாக சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் கடுமையாகத் தாக்கப்பட்டவாறு நடத்திச் செல்லப்பட்டதுடன், பொலிஸ் நிலையத்தில் பல தேவைகளுக்காகவும் வந்திருந்த பெண்கள் பொதுமக்கள் மற்றும் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பெண் பொலிஸார் முன்னிலையில் வாகனத்திலிருந்து அரைநிர்வாணமாக இறக்கி பொலிஸ் நிலையத்தினுள் கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.
நான் பாராளுமன்ற உறுப்பினர் என்பது நன்கு தெரிந்து கொண்டு வேண்டுமென்று உயிராபத்தை ஏற்படுத்தும் நோக்கில் அல்லது அச்சுறுத்தி அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஓரங்கட்டும் நோக்கில் நன்கு திட்டமிட்டே என்மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார் இனவாதமாக மத வாதமாக செயற்பட்டனர் . பொலிஸாரின் மேற்படி செயற்பாடுகளால் மிக மோசமான மனஉழைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். எமது மத உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஒன்று கூடும் சுதந்திரம் அடிப்படை மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன . சுதந்திரமாக அரசியலில் ஈடுபட முடியாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
என்னுடன் பணியாற்றினால் பொலிஸாரால் பழிவாங்கப்படுவோம் என்ற அச்சம் என்னுடன் பணியாற்றும் உத்தியோகபூர்வ பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் எனது கடமைகளை ஆற்றமுடியாமல் உள்ளது. இதன் மூலம் எனது கௌரவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. மேற்படி சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு எனக்கும் எனது செயலாளருக்கும் ஏற்பட்ட அபகீர்த்திக்கு இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் என்பதுடன், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படல் வேண்டும் என்றார்.