
சஜித்-அனுர நேரடி விவாதம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே பகிரங்க விவாதத்திற்கு தயார் என தேசிய மக்கள் சக்தி பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அரசாங்கத்தில் தமது கட்சிகளின் பொருளாதார கொள்கைகள் தொடர்பிலேயே இந்த விவாதம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் கட்சிகளின் பொருளாதார வேலைத் திட்டம் தொடர்பில் பொது விவாதம் ஒன்றிற்கு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் விடுத்த சவாலை தாங்கள் ஏற்றுள்ளதுடன், எழுத்து மூலம் இதற்கான அனுப்பி வைக்குமாறு அவர்கள் கேட்டுள்ளதால் அதற்கான பதிலை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்பதால், ஜனாதிபதி வேட்பாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து முதலில் விவாதம் நடத்துவது மிகவும் பொருத்தமானது, இதன் மூலம் அவர்களின் கொள்கைகளை அறிய முடியும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.