
மயிலத்தமடு,மாதவனையில் 200வது நாளில் போராட்டம்
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் ஆரம்பமாகி நேற்றுடன் 200வது நாளை பூர்த்திசெய்யும் நிலையில் நேற்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் உட்பட பெருமளவான சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,கால்நடை பண்ணையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது சித்தாண்டி முச்சந்தி விநாயகர் ஆலயத்திலிருந்து கவன ஈர்ப்பு ஊர்வலம் ஆரம்பமாகி சித்தாண்டி மகா வித்தியாலயம் வரையில் வருகைதந்ததுடன் அங்கு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையாளர்கள் தொடர்ச்சியாக அத்துமீறல்களை முன்னெடுத்துவரும் நிலையில் இதுவரையில் அவற்றினை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.
அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியபோதிலும் இது தொடர்பில் தமது மேய்ச்சல் தரையினை மீட்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லையெனவும் இங்கு பண்ணையாளர்களினால் கவலை தெரிவிக்கப்பட்டது.
தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான காணி அபகரிப்புகளை தடுத்துநிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் இதுவரையில் எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்காமை கவலையளிப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
தமது கால்நடைகள் மூலமாக வருமானம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக இருப்பதாகவும் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.