
வலி வடக்கில் படையினர் 7 ஆலயங்களை விடுவிப்பர்
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்,
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 7 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கூறினார். கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டுக்காக விடுவிக்கப்படவுள்ளன.
சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளும் இல்லாதிருந்த இந்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் கூறினார்கள்.