அரசியல் யுக்தியா? ராமர் பூமியா? ராவணன் பூமியா?

அரசியல் யுக்தியா? ராமர் பூமியா? ராவணன் பூமியா?

ஒரு நாடு ஒரு கோயிலை இவ்வளவு கொண்டாட வேண்டுமா?

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் எனக் கண்களை கசக்கிக்கொண்டு ஆனந்தக் கண்ணீரில் திளைத்து இருக்கின்றனர்.

மற்றொருபுறம் `சமயசார்பற்ற நாடு’ என்பதற்கு அர்த்தம் என்ன எனத் தங்களுடைய கண்டனங்களை சில பிரபலங்களும், மக்களும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வந்தனர்.

அரசியல் யுக்தியா, ராமர் பூமியா, ராவணன் பூமியா?ஒரு நாடு ஒரு கோயிலை இவ்வளவு கொண்டாட வேண்டுமா? என்பதை எல்லாம் தாண்டி, முக்கியமாக ராமர் கோயிலில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் நன்கொடை.

2019-ல் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு அளித்தது. அன்றிலிருந்து ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காகப் பலரும் நன்கொடைகளை அளித்து வருகிறார்கள்.

எவ்வளவு நன்கொடை அளிக்கப்பட்டது, அதில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது, யாரெல்லாம் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள் என்ற விவரங்களைப் பார்ப்போம்…

70 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் 161 அடி உயரத்தில், 2.7 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான செலவு மட்டும் 1,800 கோடி ரூபாய். அதில் 1,100 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் கட்டப்பட்ட இரண்டாவது விலையுயர்ந்த கட்டடமாக ராமர் கோயில் உள்ளது. 2,989 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் `ஒற்றுமை சிலை’ முதல் இடத்திலும், 836 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

2020-ல் ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்காக மத்திய அரசால் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை’ உருவாக்கப்பட்டது. அப்போது 3,500 கோடி நன்கொடை வரை கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, குமார் மங்கலம் பிர்லா எனப் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ராமர் கோயில் கட்டுவதற்கான நன்கொடை அளித்துள்ளன.

அக்‌ஷய் குமார், அனுபம் கெர் மற்றும் குர்மீத் சௌத்ரி உள்ளிட்ட திரை பிரபலங்களும் கோயில் கட்டுவதுக்கு பங்களித்துள்ளனர்.

பவன் கல்யாண் 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்தார். நடிகை ஹேமமாலினி வெளியே அறிவிக்காத ஒரு தொகையை அளித்து இருக்கிறார். சகுனி படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட பிரணிதா சுபாஷ் 2021-ல் 1 லட்சம் ரூபாய் வழங்குவதாகக் கூறியிருந்தார்.

மாநில அரசுகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் பலரைத் தாண்டி ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காகத் தனிநபர்களும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

வைர வியாபாரம் செய்யும் திலீப் குமார் என்பவர் 101 கிலோ தங்கத்தை வழங்கி இருக்கிறார். ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு அதிகபட்ச நன்கொடையை வழங்கியவர் என்ற பெருமையைக் குஜராத்தைச் சேர்ந்த மொராரி பாபு பெற்றுள்ளார். ஆன்மீகத் தலைவரும், ராம கதையின் வசனகர்த்தாவான இவர் ராமாயணத்தைப் பரப்புவதில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக பாபு 18.6 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இந்தியாவுக்குள் 11.30 கோடி ரூபாயும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலிருந்து 3.21 கோடி ரூபாயும், அமெரிக்கா, கனடா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 4.10 கோடி ரூபாயும் நிதியாகத் திரட்டி இருக்கிறார்கள்.

பெறப்பட்ட நன்கொடைகளில் இருந்து 51.4% பணம் மட்டுமே மொத்த கட்டுமானத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை பராமரிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள மக்கள், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு கூகுள் பே, பாரத்பே மற்றும் யுபிஐ மூலம் நன்கொடை வழங்குவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )