
பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்காக பாராளுமன்றத்தைக் கலைக்கப் பிரேரணை!
பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆராய்ந்து வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுனவுக்குள் பெரும்பான்மையானோர் கோரிக்கை விடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென ராஜபக்ச தரப்பு அழுத்தம் கொடுத்திருந்தபோதும் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார்.
இந்த நிலையிலேயே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் இறுதிக்குள் இது தொடர்பான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் அந்தக் கட்சிக்குள் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்க பஸில் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தைக் கலைக்கை வைத்து பொதுத் தேர்தலை நோக்கிச் செல்வதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே பசிலின் திடீர் வருகை அமைந்துள்ளதாகவும் இறுதியாக முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பொதுஜன பெரமுனவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், இந்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வதை விட பொதுத் தேர்தலுக்குச் செல்வதே கட்சிக்கு வாய்ப்பாக அமையுமென கருதி அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க பசில் ராஜபக்ச இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து, பொதுஜன பெரமுனவை எதிர்க் கட்சியில் அமர வைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் மூலம் அரசாங்கத்தை பெரும்பான்மையை இழக்கச் செய்து பாராளுமன்றத்தைக் கலைப்பதே அதன் நோக்கமெனவும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆராய்ந்து வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.